மொத்தத்தில் ‘அஞ்சான்’ அதகளபடுத்தியிருக்கிறான்

anjaanகன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.

அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார்.

கமிஷனரிடம் தன் கூட்டாளிகளை விடுவிக்கும்படி பேரம் பேசுகிறார் ராஜூ. அதன்படி கூட்டளிகளை கமிஷனர் விடுவிக்க, ராஜூவும் ஜீவாவை விடுவிக்கிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் மும்பையில் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய். இதனால் கோபம் அடையும் சந்துரு புலம்பியபடி இருக்க, ராஜூ இம்ரான் பாயை கடத்தி வந்து நண்பன் சந்துருவிடம் காண்பிக்கிறார். இருவரும் சேர்ந்து இம்ரான் பாயை மிரட்டி அனுப்புகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அனுப்புகிறார்.

இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.

கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.

அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றேன் என கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. மீதிக்கதையை திரையில் காண்க….

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கலக்கலாக அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளபடுத்தியிருக்கிறார். படத்தில் பேசும் பஞ்ச் வசனங்கள் சூர்யாவின் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. ஜீவாவாக நடித்திருக்கும் சமந்தா சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். சந்துருவாக வரும் வித்யூத் ஜமால் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இருவரையும் சுற்றுலா அனுப்பும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியிருக்கிறார். சூரி கொஞ்ச நேரமே வந்தாலும் நகைச்சுவையில் ரசிகர்களை கலகலப்பூட்டுகிறார். வில்லனாக வரும் இம்ரான் பாய் கோட் சூட்டில் ஜென்டில்மேன் போன்று காட்சியளித்தாலும் வில்லத்தனத்தில் கொடுரம் காட்டியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது. யுவன் பாடிய  ‘காதல் ஆசை…’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. சூர்யா பாடிய  ‘ஏக் தோ தீன் சார்…’ பாடல் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பாடல்களில் வரும் நடனக் காட்சிகளில் நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் தனித்துவம் தெரிகிறது.

மும்பை நகரத்தின் இரவு காட்சியை சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு குறை ஏதும் வைக்கவில்லை இயக்குனர் லிங்குசாமி. சூர்யாவை மையமாக வைத்து கதையில் லிங்குசாமி வைத்திருக்கும் திருப்புமுனை அவரின் சாமார்த்தியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாயகியின் பெயரில் கூட திருப்புமுனை வைத்திருக்கிறார்.

அஞ்சான் – விமர்சனம்!

சூர்யா – சமந்தா – சந்தோஷ் சிவன் – யுவன் ஆகியோரின் கூட்டணியில், பல வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அஞ்சான்.

தனது அண்ணனான ராஜுவைத் தேடி, வாக்கிங் ஸ்டிக்கை மட்டுமே உதவியாகக் கொண்டு மும்பைக்கு வந்து சேர்கிறார் உடல் ஊனமுற்ற கிருஷ்ணா(சூர்யா). என் அண்ணன் எங்க இருக்காரு? என்ற கேள்வியுடன் ராஜு வழக்கமாகச் செல்லும் இடங்களில் ஒவ்வொருவரிடமும் கிருஷ்ணா விசாரித்து தெரிந்துகொள்வது சிறு சிறு பிளாஷ்பேக்.

சிறு வயதிலேயே மும்பைக்கு ஓடிவந்த ராஜு(சாரி, ராஜு நஹி ராஜு பாய்), தனது நண்பனான சந்துருவுடன்(வித்யுத் ஜம்வால்) சேர்ந்து கள்ளக் கடத்தல் தொழில் செய்கிறார். ராஜுவும், கிருஷ்ணாவும் ஓருயிர் ஈருடல் போன்ற நெருக்கமான நண்பர்கள். சுற்றியிருக்கும் நண்பர்களைப் போலவே வாலிப வயதிலேயே பெரிய அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் வேலைகளை செய்துவந்ததால் இவர்களுக்கு எதிரிகளும் ஏராளம்.

 

இந்த சூழ்நிலையில் புதிய போலிஸ் கமிஷனர் இவர்களது கூட்டத்தை அடக்க நினைக்கும் போது, கமிஷனரை வழிக்கு கொண்டு வர அவரது மகளை(சமந்தா) ராஜு பாய் கடத்துகிறார். கடத்தல் காதலாக மாறி இவர்கள் டூயட் பாடச் செல்லும்போது ஏதோ ஒரு எதிரியால் சந்துரு கொல்லப்படுவது, ராஜு பாய்க்கு மிகப்பெரிய அடியாக அமைந்துவிடுகிறது. நண்பனைக் கொன்றவனைக் கொல்லவேண்டும் என்ற வெறியுடன் செல்லும் ராஜு பாய் வழியிலேயே சுடப்பட்டு ஆற்றில் தள்ளப்படுகிறார் என்பது அந்த பிளாஷ்பேக்கின் தொகுப்பு.

பிளாஷ்பேக் அனைத்தையும் தெரிந்துகொள்ளும் கிருஷ்ணாவுக்கு, அவரது அண்ணனைக் கொன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. அண்ணனைக் கொன்றவர்களை ஒற்றைக் காலுடன் கிருஷ்ணா என்ன செய்யப்போகிறார்? சமந்தா என்ன ஆனார்? என்பது மீதிக்கதை.

 

முரடனாக வரும் ராஜு பாய் கேரக்டரிலும் சரி, அமைதியான கிருஷ்ணா கேரக்டரிலும் சரி, தேவையான நடிப்பைக் கொடுத்து தனது திறமையை நிரூபித்திருக்கிறார் சூர்யா. அஞ்சான் மூலம் பாடகராகவும் அறிமுகமாகும் சூர்யா மேலும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சுடிதார், மாடர்ன் டிரஸ், பிகினி என அனைத்து உடையிலும் சமந்தாவின் அனைத்து அங்க லாவண்யங்களும் எக்ஸ்போஸ் ஆகி ரசிகர்களை கிரங்கடிக்கிறது. அனேகமாக சமந்தாவின் உடைக்கு அதிக செலவாகியிருக்காது. ஒரு கேங்ஸ்டர் ஸ்டோரியாக இருந்தும் நடிகைக்கு இத்திரைப்படத்தில் நல்ல ஸ்கோப் இருப்பது, சமந்தாவின் நடிப்புத் திறமைக்கு கிடைத்த சன்மானம்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஐடம் சாங்க் கூட மெலடியாகவே கேட்கிறது இத்திரைப்படத்தில். துப்பாக்கி குண்டுகளுக்கிடையே யுவனின் பின்னணி இசையும் போட்டி போடுகிறது. ’காதல்  ஆசை  யாரை  விட்டதோ! உன்  ஒற்றை  பார்வை  ஓடி  வந்து  உயிரை தொட்டதோ!’ பாடல் குண்டு மழைக்கிடையே ஒரு சாரல்.

சந்தோஷ் சிவன் ரெட் டிராகன் கேமராவை பிழிந்துவிட்டர் என்று சொல்லலாம். மும்பை நகரத்தை புதுமாதிரியாக காட்டி ரசிகர்களை ஒவ்வொரு ஃபிரேமிலும் கவர்ந்திருக்கிறார். இது காலையில் நடக்கும் காட்சி, இது பிறபகல் நடக்கும் காட்சி, இது மாலையில் நடக்கும் காட்சி என்று சொல்லத்தக்க வகையில் சிறந்ததொரு பணியை செய்திருக்கும் சந்தோஷ் சிவன் தனது பெயருக்கு பின்னாலிருக்கும் விருதுகளுக்கு பெருமை சேர்க்கிறார்.

ஹீரோவிலிருந்து ஓரமாக நிற்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை அனைவரையும் செதுக்கியிருக்கிறார் லிங்குசாமி. ஒரு புது சூர்யாவைக் கொடுப்பேன் என சொன்னதை அப்படியே நிரூபித்துவிட்ட லிங்குசாமி, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரே ஒரு பாட்டுக்காக பிளாஷ்பேக் போறதெல்லாம் கொஞ்சம் ஓவர் சார். ’என் எதிரியிடம் கூட துரோகிகள் இருக்கக் கூடாது’ என்ற படத்தின் முடிவு விசில் சத்தத்துடன் தியேட்டரை விட்டுக் கிளம்ப ரசிகர்களை தூண்டுகிறது.

 

அஞ்சான் – வென்றான்!