கதை திரைக்கதை வசனம் இயக்கம் – (விமர்சனம்)

tiraiஇயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன், இராதா கிருஷ்ணன் பார்த்திபனாக பெயரில் “பெரிய மாற்றம் செய்து கொண்ட பின் பெரிதாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி, சின்னதாக நடித்து(வந்து போகும்) இருக்கும் படம் தான் “”கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம்!

இந்தப்படத்திற்கு தலைப்பையும், கருத்துக்களையும் தந்து உதவிய படைப்பாளிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி., திருட்டு விசிடியிலயும், இண்டர்நெட்டிலும் திருட்டு தனமா படம் பார்த்து அடுத்தவங்க உழைப்பை சுரண்டாமல் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களையும் வரவேற்கிறோம், உள்ளிட்ட வாசகங்களை டைட்டில் கார்டில் முன்னதாக போட்டு “கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் டைட்டிலை மிளிர விட்டதும், ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் லிஸ்ட்டுகளை ஒளிர செய்து எழுத்தும், இயக்கமும் எனும் கார்டுக்கு பதிலாக இந்தப்படத்தின் தலைப்பாய்… இராதா கிருஷ்ணன் பார்த்திபன் எனும் இடத்தில் தொடங்கும் பார்த்திபன் “டச் படம் முழுக்க பரவி, விரவி கிடப்பது தான் “க.தி.வ.இ படத்தின் பெரும் பலமும், பலவீனமும்!

முற்றிலும் புதுமுகங்களான ஏழெட்டு யுவன், யுவதிகளுடன் ஆர்யாவும், அமலாபாலும் முக்கியபாத்திரத்தில் நடிக்க, அவர்களை காட்டிலும் முக்கிய பாத்திரத்தில் தம்பி ராமைய்யாவும் நடித்திருக்கிறார்! விஷால், விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், டாப்சி உள்ளிட்ட நட்சத்திரங்களை கெஸ்ட் ரோலிலும், விமல், பரத், ஸ்ரீகாந்த், சாந்தனு, இனியா, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களை ஒரு புரமோஷன் பாடலுக்கும் ஆங்காங்கே டைரக்ஷ்ன் “டச் ஆக புதுமை எனும் பெயரில் தானும் தலைகாட்டி மொத்த படத்தையும், ‛‛A Tribute to 100 years of Indian Cinema” என பப்ளிசிட்டி செய்து ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நாட்டுபற்றுடன் படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கும், அவரது பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸூக்கும் ஓர் ராயல் சல்யூட் அடிக்கலாம்! அதற்காக “கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் டைட்டிலுக்கு கீழேயே, ‛‛A Film without Story” என புதுமையாக எழுதியிருக்கும் பார்த்திபனுக்கு, என்னதான் புதுமை என்றாலும் எத்தனை துணிச்சல்?

சரி அப்படி என்ன தான் கதை? கதையே இல்லை என பார்த்திபனே கூறும்போது “க.தி.வ.இ படத்தில்…? என்ன என பகுத்தெறிந்து பார்த்தோமென்றால்… கோடம்பாக்கத்தில் சினிமா கனவுகளுடன் போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை போராட்டங்கள் தான் இப்படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! அதிலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சம்சாரி ஆன ஓர் இளம் இயக்குநரின் வீட்டுக்கு ‛உள்ளே வெளியே’ போராட்டத்தையும், அவருக்கு உதவியும், உபந்திரமும் பண்ணும் சுற்றம், நட்பு மற்றும் சொந்த பந்தத்தையும் கட்டம் கட்டி தன் பாணி கிண்டல், கேலி, நக்கல், நையாண்டியுடன் சீன் பை சீன் செதுக்கியிருக்கிறார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

பார்த்திபனின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு இயக்குநர் வாய்ப்பு தேடி அலையும் இளைஞராக நடித்திருக்கும் புதுமுகம் தமிழில் தொடங்கி அவரது காதல் மனைவியாக வரும் புதுமுகம், இயக்குநராக ஆக துடிக்கும் இணை, துணை இயக்குநர்களாக வலம் வரும் இளைஞி, இளைஞர்கள் மற்றும் 2 பொண்டாட்டி, 28 வயது மகள், 40 வருட அனுபவத்துடன் 58 வயதான துணை இணை இயக்குநராகவே போராட்டகரமான வாழ்க்கை நடத்தும் தம்பி ராமைய்யா வரை சகலரும், பலே, பலே சொல்லும் அளவிற்கு பளிச்சிட்டிருக்கின்றனர். இவர்களை காட்டிலும் கெஸ்ட்ரோலில் வந்து பெஸ்ட் பர்பாமென்ஸ் கொடுத்திருக்கின்றனர் பிரபல சீனியர் கதாசிரியர் கலைஞானம், தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தொடங்கி ஆர்யா, அமலாபால் வரை, ஆக பிரமாதம் எனும் அளவில் நடித்திருக்கின்றனர்.

அதிலும் ஓப்பனிங் சீனில் சுனாமியால் மாட்டியபடி தவிக்கும் விஷால், வேலையில்லா இளைஞராக, “”பழைய சாதம், பெரிசா? பிரியாணி பெரிசா? என பெற்ற தாயிடம் கேள்விகேட்டு பிரியாணி ஒரு மணிநேரத்தில் செஞ்சிடுவாங்க, பழையது ரெடியாக ஒன்றரை நாள் வேண்டும், அதனால் பழைய சாதம் தான் பெரிசு என்றபடி… சீலிங்பேனை கழட்டிபோகும் விஜய் சேதுபதி, ஈழத்தில் குண்டடிப்பட்டு கிடக்கும் நிலையிலும் கற்பை காபந்து செய்து கொள்ள வீணை கம்பியால் கழுத்தை அறுத்துக் கொண்டு மாண்டுபோகும் டாப்சி, பிரம்மா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் “க.தி.வ.இ படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

எங்கேயும் எப்போதும் சத்யாவின் பின்னணி இசை, ஷரத், விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.தமன், அல்போன்ஸ் ஜோஸ் உள்ளிட்டவர்களின் பாடல்கள் இசை, ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், இயக்குநர் பார்த்திபனின் “டச் சில இடங்களில் ஓவர் டோஸாகி விடுவது தான் “கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் பலமும், பலவீனமும்!

குழப்பமான கதைகளமும், காட்சிபடுத்தலும் வித்தியாசம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், முன்பாதியைவிட விறுவிறுப்பாக படமாக்கபட்டிருக்க வேண்டிய பின்பாதி படம் அவ்வாறு படமாக்கப்படாமல் இருப்பது, பின்னால் வருவதை முன்கூட்டியே அறியும் “இன்துசிஸ் இத்யாதி இத்யாதி விவகாரங்கள், பிரிவுகள், சோகங்கள், முடிவை சரியாக சொல்ல முடியாத க்ளைமாக்ஸ் என சற்றே போரடிக்கிறது.

சினிமாக்காரர்களுக்கு சட்டென புரியும் இக்கதை, வெகுஜனங்களுக்கும் புரியும் வகையில் இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருந்ததென்றால், “கதை திரைக்கதை வசனம் இயக்கம் மொத்தபடமும், சினிமா விழாக்களில் ஜொலிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போலவே இருந்திருக்கும்! இன்னும் இனித்திருக்கும்!!