புலிப் பார்வை படத்தை தடை செய்யக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனு

puliparvai_against_tna_001புலிப்பார்வை திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கையளித்துள்ளது.

அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஈழத்தில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தை மையப்படுத்தியும், தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்னும் பாலகனை மையப்படுத்தியும் புலிப்பார்வை என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இப்படத்தை பச்சமுத்து பாரிவேந்தர் தயாரித்துள்ளார். பிரவீன் காந்தி இயக்கி உள்ளார். இப்படத்தில் பாலகன் பாலச்சந்திரன் விடுதலைப் போராளிகளின் சீருடையை அணிந்து கொண்டு துப்பாக்கி ஏந்தி வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈழத்தில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தை குறித்து பல தவறான செய்திகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. பாலகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் சிங்கள இனவெறி ராணுவத்தால் கொல்லப்பட்டான்.

இறுதிவரை பாலச்சந்திரன் புலிகள் சீருடை அணிந்ததில்லை, துப்பாக்கியும் ஏந்தியது இல்லை. இப்படி இருக்கும் நிலையில் உண்மைக்கு புறம்பான காட்சிகளை இந்த புலிப்பார்வை படத்தில் காட்டியுள்ளார் இயக்குனர்.

இப்படம் வெளியானால் பாலகன் பாலச்சந்திரன் ஒரு சிறார் தீவிரவாதி போல மக்களின் மனங்களில் சித்தரிக்கப்படுவான். இது தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும்.

உலக மக்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்த பாலகன் பாலச்சந்திரனின் அப்பாவி முகம் மறக்கடிக்கப்பட்டு அவன் ஒரு தீவிரவாதி போல மக்களிடையே அடையாளப்படுத்தப்படுவான். இதை உலகத் தமிழர்கள் யாரும் விரும்பவில்லை.

இப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும். மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் இப்படத்திற்கு எதிராக போராட்டக்களத்தில் இறங்குவார்கள். அதனால் தயவு செய்து இப்படத்தை திரையரங்குகளில் திரையிட சென்னை காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காவல்துறை ஆணையரிடம் கேட்டுக் கொள்கிறது.

என குறிப்பிடப்பட்டிருந்தது.