பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கண்டுபிடிப்பு பரத். பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி செல்லமே படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் பெயர் வாங்கி, காதல் படத்தில் மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். தற்போது தனது 25வது படத்தை நிறைவு செய்துவிட்டார்.
இந்த 25 படத்திற்குள்ளேயே ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்துவிட்டார். அவரது 25வது படமான ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. அவருடன் உரையாடியதிலிருந்து…
* 10 வருட அனுபவம், 25 சினிமா, காதல் திருணம் எல்லாவற்றையும் எப்படி பார்க்கிறீங்க?
நினைச்சாலே பிரமிப்பா இருக்கு. பத்து வருஷத்துல என்னவெல்லாம் நடந்திருக்கு. ஷங்கர் சார் ஆபீசுக்கு ஆடிசன் போனது இன்னும் நினைவிருக்கு. என்னோட டான்ஸ் திறமைதான் பாய்ஸ்ல சான்ஸ் வாங்கிக் கொடுத்துச்சு.
பார் தி பீப்பிள், செல்லமே, பட்டியல், எம் மகன், வெயில், கண்டேன் காதலை, 555 இப்படி எல்லா ஜானர்லேயும் படம் பண்ணியிருக்கேன். அது பெரிய அனுபவம். திடீர்னு ஆக்ஷன் படங்கள்ல குதிச்சு சின்ன சறுக்கல் வந்தப்போ கடுமையா உழைச்சு 555 மூலமா என்னை நானே தூக்கி நிறுத்திக்கிட்டேன்.
இப்போ பாலிவுட் வரைக்கும் போயிருக்கேன். இந்த அனுபவங்கள் மக்களோட பல்சை புரிஞ்சிக்கிட்டு நல்ல சினிமாவை செலக்ட் பண்ற பக்குவத்தை கொடுத்திருக்கு. நான் நடித்த 25 படங்களும் நான் நடித்த 25 பாடங்கள் என்றால் அது மிகைப்படுத்தி சொல்வதல்ல. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொடுத்திருக்கு.
அப்புறம் சொந்த வாழ்க்கை. அதிகமான கிசுகிசுக்களில் சிக்காத நடிகர்களில் நானும் ஒருத்தன்னு நினைக்கிறேன். ஒரு வருஷமா லவ் பண்ணினேன். அப்புறம் பெற்றவர்கள்கிட்ட கிரீன் சிக்னல் வாங்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஒரு வருஷ காதல்ங்றதால என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டு வந்திருக்காங்க ஜெஸ்லி. வாழ்க்கை லவ்வபிளா போயிட்டிருக்கு.
* 25வது படம் என்பதால் நிறைய மெனக்கெட்டிருக்கீங்க போல…?
25வது படம்ங்றது எனக்கு ஒரு மைல் கல். அது ஸ்டிராங்கா இருக்கணும்னு நினைச்சேன். 100 கதைகள் வரைக்கும் கேட்டிருப்பேன். இப்போது காமெடிக்கு ஒரு நல்ல வேல்யூ இருக்கு. நானும் எம்டன் மகன் மாதிரி சில படங்கள்ல காமெடி பண்ணியிருக்கேன்.
கலகலன்னு ஒரு காமெடி படம் பண்ணினா என்னன்னு தோணினப்போதான் சித்தவைத்திய சிகாமணி வந்தது. கதை கேட்டப்போவே விழுந்து விழுந்து சிரிச்சேன். இதுதான் 25வது படம்னு பிக்ஸ் பண்ணினேன். பாலச்சந்தர் சார் மகள் தயாரிச்சது, 22 காமெடி ஆக்டர்கள் வந்து சேர்ந்தது எல்லாமே அடுத்தடுத்து நடந்த பாசிட்டிவான விஷயங்கள்.
* காமெடி ரோல்ல நடிக்கிறது ஹீரோ இமேஜை பாதிக்காதா?
நான் என்னை எப்பவுமே ஹீரோன்னு சொல்லிக்கிட்டதே இல்லை. கதைக்கு நாயகன் அவ்வளவுதான். ரஜினி சார், கமல் சார், விஜய் சார் ஏன் இப்போ அஜீத் சார்கூட காமெடி பண்ணுகிறார். காமெடியா நடிக்கிறதுதான் கஷ்டம். காமெடியிலும் பெயர் வாங்கினாத்தான் ஒரு நடிகன் முழுமையாகுறான்னு நினைக்கிறேன்.
* காமெடி காட்சிக்காக நிறைய விட்டுக் கொடுத்தீங்களாமே?
எப்படியாவது படம் ஜெயிக்கணும், நம்மை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் லாபம் பார்க்கணும். அதுக்காக என்ன வேணாலும் செய்யலாம். சில காமெடி சீன்ல நாலஞ்சு காமெடியன்கள் நடிச்சிட்டிருப்பாங்க. நான் ஒரு அட்மாஷ்பியர் ஆர்ட்டிஸ்ட் லெவலுக்கு சீன்ல நிப்பேன்.
அந்த சீனுக்கு அப்படித்தான். அதுல போய் நான் ஹீரோ, நான்தான் அதிக வசனம் பேசுவேன். நான் தான் செண்டிரல்ல நிப்பேன்னு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.
* ஜனங்களை சிரிக்க வைக்கிறது மட்டும்தான் நல்ல சினிமாவா?
கண்டிப்பாக இல்லை. சிரிக்க வச்சு சிந்திக்கவும் வைக்கணும். சும்மா சிரித்தால் மட்டும் போதும்னா டி.வியில டாம் அண்ட் ஜெரி பார்த்துக்கிட்டு உட்காரலாமே, மக்கள் எதுக்கு தியேட்டருக்கு வரணும். சிரிப்போடு வேறு சில விஷயங்களையும் எதிர்பார்க்குறாங்க. அதை கொடுக்கணும். சித்த வைத்திய சிகாமணி கொடுத்திருக்கு. மக்களுக்கு அவசியம் தேவையான ஒரு விஷயத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கு.
* சன்னி லியோனோடு நடிச்ச அனுபவம்…?
பாஸ்… இதுவரைக்கும் 20 ஹீரோயினுக்கு மேல் உடன் நடிச்சிருக்காங்க. அவுங்கள பற்றியெல்லாம் கேக்க மாட்டீங்களா. சன்னி மட்டும் என்ன ஸ்பெஷல். எல்லா ஹீரோயின்கள் மாதிரிதான் அவுங்களும். அதுக்குமேல நான் யோசிக்கிறதே இல்லை.
அடுத்த படங்கள்…?
நிறைய கதை கேட்டுக்கிட்டிருக்கேன். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் செந்தில்குமார் இயக்கும் ஏழு கடல் தாண்டி படத்தில் நடிக்கிறேன். 80 சதவிகித படம் முடிந்து விட்டது. இது ரஃக்பி விளையாட்டை மையமாக கொண்ட கதை. இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடிக்க தீர்மானித்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உன் கதையாடா இப்ப முக்கிய ,நாங்கலே ஒரு வேல சாப்பட்டுக்கு ஊ……. ,எங்க கதையே பெரிய கத………….