சேலத்தில் புகழ்பெற்ற அய்யம்பேட்டை சித்தவைத்திய சாலை வைத்து நடத்தி வருகிறார் சிகாமணி. சிறுவயதில் இவரை வாத்தியார் அடித்துவிட்டார் என்பதற்காக, இவருடைய அப்பா படிப்பை நிறுத்தி தலைமுறை தலைமுறையாக செய்துவரும் சித்த வைத்தியத்தை கற்றுக்கொடுத்து சித்த வைத்தியராக ஆக்குகிறார்.
சிகாமணி படிக்காததால் இவருடைய நண்பர்கள் இவரை ஏமாற்றி இவரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். இது சிகாமணிக்கும் தெரியவருகிறது. தான் படிக்காதவன் என்பதால்தான் தன்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். ஆகையால், படித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் யாரும் தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்று முடிவெடுக்கிறான்.
இதற்காக காலேஜ் வாசலில் அமர்ந்துகொண்டு தனக்கு பிடித்த பெண்ணை தேடுகிறார். அப்போது, காலேஜில் இருந்து வெளியே வரும் நந்தினியை பார்த்ததும் அவள்மீது காதல்வயப்பட்டு விடுகிறார்.
அவளை பின்தொடர்ந்து போய் அவளது வீட்டை கண்டுபிடித்து பெண் கேட்க போகிறார். அவளோ தன்னை கடத்தத்தான் அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு, தனது அப்பாவிடம் சென்று முறையிடுகிறார்.
அந்த ஊரில் மிகப்பெரிய மனிதரான நந்தினியின் அப்பா சிலம்பு சின்னத்துரை, தனது மகளை பின்தொடர்ந்து வந்த சிகாமணியையும், அவரது நண்பர் பால்பாண்டியையும் அடித்து துவம்சம் செய்கிறார்.
அப்போது சிகாமணி போனுக்கு வரும் அழைப்பை எடுத்து பேசும் சின்னத்துரை, அந்த போனில் பேசியவர் டாக்டர் இருக்கிறாரா? என்று கேட்டதும், சிகாமணி டாக்டர் என்று தவறாக புரிந்துகொள்கிறார். இவர்களும் அடி தாங்கமுடியாததால் தாங்கள் டாக்டர்தான் என்று பொய் சொல்கிறார்கள்.
இதையடுத்து, அவரது பெண்ணை திருமணம் செய்யத்தான் அவளை பின்தொடர்ந்தோம் என்று உண்மையைச் சொன்னபின், சின்னத்துரைக்கு சிகாமணியை பிடித்துப்போய் விடுகிறது. தனது பெண்ணை அவருக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவெடுக்கிறார். இருவீட்டாருக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் இருக்க சிகாமணி-நந்தினி திருமணம் நடந்தேறுகிறது. இதற்கிடையில், சிகாமணியின் நண்பர்கள் அவன் உண்மையான டாக்டர் இல்லை என்பதை பெண் வீட்டாரிடம் சொல்லிவிட துடியாய் துடிக்கிறார்கள்.
இறுதியில், சிகாமணி டாக்டர் இல்லை என்பது நந்தினிக்கும், அவரது பெற்றோருக்கும் தெரிந்தா? நண்பர்கள் சிகாமணியின் முகத்திரையை கிழித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சித்த வைத்தியர் சிகாமணியாக வரும் பரத், அப்பாவி இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். தான் டாக்டர் இல்லை என்பது பெண் வீட்டாருக்கு தெரிந்துவிடுமோ? என்று தவிக்கும் காட்சிகளில் நம்மையும் தவிக்க விடுகிறார்.
நந்தினியாக வரும் நந்திதா, சேலையில் கச்சிதமாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். நந்திதா இதுவரை நடித்திருக்கும் படங்களில் வரும் பாடல்களில் முகபாவணைகளிலேயே எல்லோரையும் கவர்ந்துவிடுவார். இப்படத்தில் குத்துப்பாட்டு, வெஸ்டர்ன் என ஆட்டம் போட்டிருக்கிறார். ஆனால், பரத்துக்கு இணையாக இவரால் ஆட்டம் போட முடியவில்லை.
சிலம்பு சின்னதுரையாக வரும் தம்பி ராமையா தனது மூத்த மகளை தொழிலதிபருக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டேன், இளைய மகளை டாக்டருக்கு திருமணம் செய்துகொடுத்து விட்டேன் என்று பெருமைப்படும் அப்பாவாக அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், படம் முழுக்க இவருடைய சத்தம்தான் அதிகமாக கேட்கிறது. அதை கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மற்றபடி, கருணாகரன், படவா கோபி, இமான் அண்ணாச்சி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து செம்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒருவன் படிக்காமல் பெரிய ஆளாக இருந்தால் அவன் என்னமாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மைய கருத்தை வைத்து படமாக எடுத்திருக்கும் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். அதேவேளையில், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் படத்தில் விளக்கியிருக்கிறார். சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்தை காமெடியாக சொல்ல நினைத்தது சிறப்பு.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். சண்டைக்காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது. பாடல் காட்சிகளிலும் சிரத்தை எடுத்திருக்கிறார். சைமன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலா பாடும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை.
மொத்தத்தில் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ சிரிப்பு வைத்தியம்