இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட நடிகரும், 1982-ல் வெளியான ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கியவருமான ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று காலமானார்.
பிரிட்டைன் கலையுலகின் தனிப்பெரும் அடையாளமாக திகழ்ந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, மகாத்மா காந்தியின் அகிம்சை வரலாற்றை சித்தரிக்கும் ‘காந்தி’ படத்தை இயக்கியதன் மூலமாக கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் பிடித்தவராவார்.
இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற இவர், பல ஆங்கிலப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்ததுடன் பல்வேறு திரைப்பட விழாக்களின் நடுவர்கள் குழுவிலும், விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
சுமார் 60 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய காரியங்களுக்கான நல்லெண்ணத் தூதராகவும் தொண்டாற்றியுள்ளார்.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூஷன்’, பிரிட்டைனின் உயரிய ‘லார்ட்’ உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்ற இவர், உடல்நலக்குறைவால் தனது 90-வது வயதில் நேற்று காலமானார்.