சலீம் – திரை விமர்சனம்

salimஅப்பா, அம்மா இல்லாத சலீம் (விஜய் ஆண்டனி) தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேர்மையான எண்ணமும் எந்த பிரச்சனைக்கும் செல்லாமலும் சமூக அக்கறையுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் நாயகியான நிஷா(அக்‌ஷா)வுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பின் இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள்.

இவர்கள் பழகியதில் சலீமின் குணாதிசயங்கள் நிஷாவிற்கு பிடிக்காமல் போகிறது. இதனால் நிஷா, சலீமை திருமணம் செய்ய மறுக்கிறார். இதற்கிடையில் சலீம் வேலை செய்யும் மருத்துவமனையின் நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்கிறது. இதற்கு துணைப் போகாத சலீமை வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்கள்.

இவ்வளவு நாள் நேர்மையாக வாழ்ந்ததற்கு பரிசாக வேலையை விட்டு நீக்கப்பட்டதும், தனக்கு மனைவியாக வரவேண்டிய நிஷா தன்னை தூக்கி எறிந்ததையும் நினைத்து மனவேதனை அடைகிறார். இதனால் நேர்மையை தூக்கிப்போட்டு விட்டு தன் இஷ்டத்திற்கு வாழ நினைக்கிறார் சலீம். இதனால் என்ன நடந்தது? அவர் அடைந்த இலக்கு என்ன? என்பதே மீதிக்கதை.

படத்தில் விஜய் ஆண்டனி தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார். முதற்பாதியை விட இரண்டாம்பாதியில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் குடித்துவிட்டு ரகளை செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது. நிஷாவுடன் காதல் செய்யும் காட்சிகளில் அழுத்தமாக பதிகிறார். சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார். சலீம் கதாபாத்திரத்திற்கு வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

நாயகி அக்‌ஷா தோற்றத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் நடிப்பில் இளமைத் துள்ளலுடன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தவறு செய்பவர்களை உடனே தட்டிக்கேட்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார்.

மத்திய அமைச்சராக வரும் ஆர்.என்.மனோகர் பார்வையிலேயே மிரட்டுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சந்திரமௌலி, இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ் ஆகியோர் துடிப்பான நடிப்பால் நம் கண்முன் நிற்கிறார்கள்.

கதையை நல்ல திரில்லர் படங்களுக்கே உரிய காட்சி அமைப்புகளுடன் திரைக்கதையாக்கியிருகிறார் இயக்குனர் நிர்மல் குமார். முதல் பாதியில் திரில்லர் கதைக்கான அச்சாரத்தைப் போடும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் முழு திரில்லர் படமாக உருவெடுக்கிறது. இரண்டாம் பாதி முழுவதும் ஓட்டலைச் சுற்றி கதை நகர்ந்தாலும் எந்தவொரு காட்சியிலும் சலிப்பை ஏற்படுத்தாமல் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு கூடுதல் பலம் விஜய் ஆண்டனியின் இசை. பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக சிவசம்போ, மஸ்காரா மஸ்காரா பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் மிரள வைத்திருக்கிறார்.

இது அறிமுகப்படம்தானா? என்ற அளவிற்கு ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறார் கணேஷ் சந்திரா. பாடல் காட்சிகளில் அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் போல் காட்சி அமைத்திருக்கிறார். படத்தின் எடிட்டிங், காட்சிகளை கோர்வையாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

மொத்தத்தில் ‘சலீம்’ சலாம் போடலாம்.