அரசியலில் மட்டும் வாரிசுகள் வளர்ந்து வாரிசு அரசியலை உருவாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதை விட சினிமாவில்தான் வாரிசு கலாச்சாரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தேதியில் தங்களது வாரிசுகளை சினிமாவில் இறக்கி விடாத நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளது. ஆனால், திரையுலகில் பெருமையான துறையான இயக்கத்தில் மட்டும் வாரிசுகள் அதிகம் ஈடுபடத் தயங்குகிறார்கள். அனைவருக்குமே நடிகராக வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் உள்ளது. அப்படிப்பட்ட வாரிசுகளுக்கு இடையிலும் எந்த திரைப்பட பின்னணியும் இல்லாத ஒரு சிலர் அவர்களது சொந்தத் திறமையால் வளர்வதை யாராலும் தடுக்க இயலவில்லை. சினிமாவைப் பொறுத்தவரை திறமைதான் முக்கியம், அதன் பின்தான் மற்றதெல்லாம் என்பதை நமது ரசிகர்களுக்கும் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டி வருகிறார்கள்.
சரி, தற்போதைக்கு வாரிசு கலாச்சாரத்தில் யார் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இயக்குனர்களாக உள்ளார்கள். கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா நடிகைகளாக உள்ளார்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் விஜய் முன்னணி நடிகராக உள்ளார். நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி முன்னணி நடிகர்களாக உள்ளனர். சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிகையாக இருக்கிறார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடிகர் அவதாரம் எடுத்து விட்டார். இவர்களது குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையும் நடிக்க வந்தாகி விட்டது. டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு நடிகராகவும், இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராகவும் உள்ளனர். கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா விஷால் ஜோடியாக அறிமுகமானார். தியாகராஜன் மகன் பிரசாந்த் நடிகராக உள்ளார்.
ஜெமினி கணேசன் பேரன் அபிநவ் ‘ராமானுஜன்’ படத்தில் நடிராக அறிமுகமானார். நாசர் மகன் லுத்புதீன் ‘சைவம்’ படத்தில் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். இன்னும் பாண்டியராஜன், மயில்சாமி, சிங்கமுத்து, ஆகியோரின் மகன்கள் கூட நடிகராக உள்ளனர். நேற்று தமிழ், மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிகராக கமல்ஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இன்னும் இந்த பட்டியல் நீ….ண்டு கொண்டேதான் போகும்.