கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்ல, முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்த படம் – த்ரிஷ்யம். மோகன்லால் கதாநாயகனாக நடித்த த்ரிஷ்யம் படத்தை தற்போது கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தயாரிக்கிறார்.
த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசஃபே பாபநாசம் படத்தையும் இயக்கி வருகிறார். மலையாள சினிமாவில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரியாகி மீனா நடித்த படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் மீனா நடித்த வேடத்தில் தமிழில் நடிக்க மீனா, ஸ்ரீதேவி, சிம்ரன் உட்பட பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் கௌதமி நடிக்கிறார். நடிப்பிலிருந்து விலகி, கமலின் கம்பெனியனாக இருக்கும் கௌதமி தமிழில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகிறார்.
த்ரிஷ்யம் ரீ-மேக்குக்கு பாபநாசம் என்று தலைப்பு சூட்டப்பட்டதற்கு காரணம்…திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் கதை நிகழ்கிறது. எனவே பாபநாசம் படத்தின் படப்பிடிப்பையும் பாபநாசத்தை சுற்றி உள்ள கிராமங்களில் நடத்தினார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் பாபநாசத்தில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது பாபநாசம் படக்குழு கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. கேரளாவில் உள்ள தொடுபுழாவில் பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் ஏற்று நடித்த கேரக்டர் பெயர் ஜார்ஜ் குட்டி! பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்து வரும் கேரக்டருக்கு சுயம்புலிங்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.