நடிகை : மோனல் கஜ்ஜார்
இயக்குனர் : கௌரவ்
இசை : டி.இமான்
ஓளிப்பதிவு : விஜய் உலகநாத்
போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வேலையில் இருக்கும்போதே தனது ஒரு காலை இழந்து விடுகிறார். போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவுக்கோ போலீசாக வேண்டும் என்பதில் துளியும் ஆசையில்லை. இருந்தாலும் அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது.
விக்ரம் பிரபுவுக்கு எப்படி போலீசாக வேண்டும் என்பது பிடிக்கவில்லையோ, அதேபோல் மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்னசெய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறான்.
மோனல் கஜ்ஜாரிடம் பொய் சொல்லிவிட்டு போலீஸ் கலந்தாய்வில் கலந்து கொள்ள செல்கிறான். ஆனால், அங்கு மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனல் கஜ்ஜாரின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் மோனல் கஜ்ஜாரின் அப்பா இவர்கள் காதலை பிரிக்க நினைக்கிறார். மாறாக, தனது நண்பனான சத்யராஜுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை.
இதற்காக விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால், விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார்.
இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். அந்த நேரத்தில் மோனல் கஜ்ஜார் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து படத்துக்கு கிளம்பி வரும்படி வற்புறுத்துகிறாள். விக்ரம் பிரபுவும் படத்திற்கு கிளம்பி போய்விடுகிறார்.
அப்போது சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக பார்க்கிறார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள்.
படத்திற்கு போய்விட்டு திரும்பும் விக்ரம் பிரபு, தனது அப்பா ஏடிஎம் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது தெரிந்ததும் அவர்களை கண்டுபிடித்து, தண்டிக்க முடிவெடுக்கிறார். இதுவரை போலீஸ் வேலையின் மீது பிடிப்பு இல்லாமல் இருந்தவருக்கு அன்று முதல் அந்த பணியின்மீது ஒருவித வெறி வருகிறது.
இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சத்யராஜ் பொறுப்பான தந்தையாகவும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜை போலீசாக பார்ப்பது சிறப்பு.
முதன்முதலாக போலீஸ் கதாபத்திரத்தை ஏற்று அதற்கு தகுந்தார்போல் சிறப்பாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. அப்பா மீதுள்ள சென்டிமெண்ட் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியான மோனல் கஜ்ஜார் தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். திரையில் பார்க்க அழகாக இருக்கும் இவர் வெகுவாக ரசிகர்களை கவர்கிறார். மகேஷ், சதீஷ் இருவரும் காமெடி கதாபாத்திரத்தை ஏற்று கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஏடிஎம் கொள்ளையராக நடித்திருக்கும் இயக்குனர் கௌரவ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதை மிகவும் ஆராய்ந்து அழகாக திரைக்கதை அமைத்திருக்கும் இவர் முதற்பாதியில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க நிறைய போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுவதுமாக காட்சிகளை அமைத்து பிற்பாதியில் விக்ரம்பிரபு மட்டும் தன் தந்தையின் நிலைமைக்காக பழிவாங்க தனிநபர் முயற்சி செய்வது சினிமாதனம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய இயக்குனரை பாராட்டலாம்.
இமான் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் ரகம். பின்னணியில் இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை எடுத்த விதம் அருமை.
மொத்தத்தில் ‘சிகரம் தொடு’ சிறந்த முயற்சி.