மெட்ராஸ் என்ற டைட்டிலுக்கு ஏற்ற மாதிரியே ரியல் மெட்ராஸை கேமராவுக்குள் கொண்டு வந்து நம்மை பரவசப்படுத்துகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். குழாயடி சண்டைகள் முதல் வெட்டுகுத்து வெறியாட்டம் வரை சென்னை வாழ்வியலை படமாக்கிய இயக்குனருக்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம்.
குறுகிய சந்துபொந்து சாலைகள், ஹவுசிங் போர்டு அப்பார்ட்மெண்டுகள், அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகும் அப்பாவி பொதுஜனம், தாயின் பாசம், நட்பின் புனிதம், காதலின் சுகம் என அடுக்கடுக்காய் உணர்வுகளை கோர்வையாக்கி நம்மை திரைக்குள் கொண்டு சென்று சென்னை வாழ்க்கையை வாழ ஒரு வாய்ப்பை கொடுக்கிறது ‘மெட்ராஸ்’திரைப்படம்.
‘இது ஒரு செவுத்துக்காக நடக்கிற பிரச்சனையில்ல, அதிகாரம்! அவன் சொல்றத நாம கேட்டுகணும், எதிர்த்து கேள்விகேக்க கூடாது… அப்படித்தான’ என்று அன்பு கதாபாத்திரம் பேசும் ஒரு வசனத்தில் அடங்கிவிடுகிறது ‘மெட்ராஸ்’ படத்தின் கதை. ஏரியாவின் மையத்தில் இருக்கிறது உயர்ந்த சுவர். இரண்டு அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் விளம்பரத்திற்காக அந்த சுவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதுவே பகையாக மாறுகிறது. ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தன் அப்பாவின் படத்தை நிரந்தரமாக சுவரில் இருக்கச் செய்கிறான் கண்ணன்.
கண்ணனுக்கு எதிராக செயல்படும் எதிர்கட்சியை சேர்ந்த மாரி. அவன் உயிரில் பாதியாக இருந்து வரும் அன்பு. அன்புவின் உயிர் நண்பன் காளி (கார்த்தி). இப்படித்தான் நகர்கிறது கதாபாத்திரங்கள். சுவரை கைப்பற்ற வேண்டும் என்கிற பிளானை அன்பு போட, அதற்கு துணையாக நிற்கிறான் காளி.
சும்மா வேடிக்கை பார்க்குமா எதிர்தரப்பு? அன்புவின் கதையை முடிக்க சதி வலை பின்னப்படுகிறது. அன்பு கொல்லப்பட்டானா? காளி என்ன செய்தான்… அரசியல் காய் நகர்தல்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது? மிக முக்கியமாக, அந்த சுவரை யார் கைப்பற்றினார்கள்… என்பது திரையில் பார்க்க வேண்டிய சுவாரஸ்யம்.
‘அந்த செவுருல எங்க தாத்தா இருக்காரு’ என்று சொன்னதும், ‘அப்போ உங்க ஆயா என்ன பக்கது வூட்டு செவுத்துல இருக்குதா?’ என நக்கல் பண்ணும் கார்த்தி சென்னைவாசியாகவே வாழ்ந்திருக்கிறார். தோற்றத்தில் தவிர்க்க முடியாத முதிர்ச்சி இருப்பது ஒன்று மட்டுமே மைனஸ். ஆனாலும், தன் அசுரத்தனமான நடிப்பில் அதை சரிகட்டியதோடு, ஹீரோவுக்கான பிம்பத்தை துடைத்து தூக்கி எறிந்துவிட்டு கதைக்கான கதாபாத்திரமாகவே மாறி இருப்பது அவருக்கு கிடைத்த ப்ளஸ்! ‘எனக்கு பொண்ணு பொறந்தா அது உன் புள்ளைக்குத் தான் மச்சான்’ என்று போதையில் நண்பனுக்கு முத்தம் வைக்கிறாரே…’ அசத்துகிறார் கார்த்தி.
கார்த்தியைக் கூட சில காட்சிகளில் தூக்கி சாப்பிடுகிறார் அன்பு கதாபாத்திரத்தில் வரும் கலையரசன். அழுவாத என்று சொல்லி மனைவியிடம் போனில் பேசும்போது கண்கலங்கும் காட்சியும், போலிஸ் ஸ்டேஷன் வாசலில் எதிர் கும்பலை கலாய்க்கும் காட்சியும் அதற்கு சாட்சி.
கலையரசியாக வரும் கேத்ரின் தெரசா, அம்சமான அழகு. கல்யாணம் பண்ணிக்குவியா என கேட்கும் நேரம்… சென்னை பொண்ணாகவே தெரிகிறார். இருந்தாலும் மேக்-அப் கொஞ்சம் ஓவர் தான். கலையரசிக்கும் காளிக்குமான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ‘அனல்காயும் பறைஓசை ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே… பழி தீர்க்கும் உன் கண்ணில் ஓர் காதல் அழகாய் தோன்றிடுமே…’ என்ற உமா தேவியின் காதல் வரிகள் அழகு சேர்க்கிறது.
கானா பாலா… பல பாடல்களில் ஆட்டம் போட வைத்திருக்கிறார், சமீப காலமாக சில பாடல்களில் எரிச்சலையும் கொடுத்திருக்கிறார். ஆனால், முதல் முறையாக தன் வசீகர குரலால் அழவைத்திருக்கிறார். ‘இறந்திடவா நீ பிறந்தாய்…’ பாடல் கண்களை ஈரமாக்குகிறது. மீண்டும் பின்னணி இசையில் புதுமை செய்திருக்கிறார் சந்தோஷ் நாராயனண். சென்னையின் அடையாளங்களை பதிவு செய்து கதைக்கேற்றபடி கேமராவை நகர்த்துகிறார் முரளி.
‘மெட்ராஸ்’ படத்தின் பெரிய பலம் சண்டைக்காட்சிகள் தான். ஃபுட்பால் விளையாடுகிற ஸ்டைலில் எதிரிகளை கார்த்தி புரட்டிப்போட்டு பந்தாடும் சண்டைக்காட்சி அதிரடி மிரட்டல். ஃபுட்பால் மேட்சையும், சண்டைக்காட்சியையும் மாற்றி மாற்றி கட் செய்து தனது திறமையை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார் பிரவீன்.
வன்முறை அதிகாமாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழும் என்பதில் சந்தேகமில்லை. என்ன செய்வது? அதுதான் ‘மெட்ராஸ்’. அதிகார வர்க்கத்தினரின் மனநிறைவுக்காக, அப்பாவி மக்களை எப்படியெல்லாம் பலிகடாவாக பயன்படுத்துகிறார்கள் என்ற அரசியல் சூச்சியை துணிச்சலோடும் தெளிவோடும் பேசியிருக்கிறது இந்த திரைப்படம்.
ஒரு காலத்துல இவரு எப்படி இருந்தாரு தெரியுமா? அவர மாதிரி யாரும் இங்கிலிஷ் பேச முடியாது என்று ‘ஜானி’ கதாபாத்திரத்தை தன் வாழ்வில் ஒவ்வொருவரும் கடந்து வந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.
சென்னையை அணு அணுவாக ஆய்வு செய்திருக்கும் இயக்குனர் பா.இரஞ்சித் இன்னும் பல தரமான திரைப்படங்களைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. படத்தின் கடைசி காட்சியில் ‘படிக்கலாமா?’ என்று சிறுவர்களைப் பார்த்து கார்த்தி கேட்கும் ஒரு வார்த்தையில் ஜெயித்துவிடுகிரார் இயக்குனர்.
சில சரிவுகளுக்குப் பிறகு கார்த்திக்கு கிடைத்திருக்கும் வெற்றி! ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை இப்போதாவது கார்த்தி புரிந்துகொண்டிருப்பார். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்குப் பிறகு அதிக இடங்களில் கார்த்திக்கு கைத்தட்டல் கிடைத்த படம் ‘மெட்ராஸ்’ என்றும் சொல்ல முடியும்.
மெட்ராஸ் – செம! காளி கலக்கிடாப்புல…