தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்திக்கு தற்போது வெளியாகி இருக்கும் மெட்ராஸ் படம், ஓரளவுக்கு பெயரை பெற்று தந்துள்ளது. அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய இப்படம், வட சென்னை ஏரியாவில் ஒரு சுவற்றை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருந்தது. மெட்ராஸ் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில், பத்திரிகையாளர்கள் முன்பு நடந்தது.
அப்போது, இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்த ஜெயராம் பேசுகையில், கார்த்தியை ஓவராக புகழ்ந்து பேசினார். மெட்ராஸ் படத்தில் நிறைய பேர் நடிக்க தயங்கினார்கள், ஆனால் நீங்கள்(கார்த்தி) தைரியமாக நடித்தீர்கள்.
உங்களை பார்க்கும்போது எனக்கு நீங்கள், மக்களின் நாயகனாக தெரிகிறீர்கள். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்.க்கு பிறகு மக்கள் நாயகன் என்ற இடம் காலியாகத்தான் இருக்கிறது. அதனால் நீங்கள் மக்கள் நாயகனாக வளர வேண்டும், நான் என்றார்.
இதுப்பற்றி கார்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளித்த கார்த்தி, நான் மக்கள் நாயகன் இல்லை. எம்.ஜி.ஆர்-ஐ போன்று எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். எனக்கு தெரிந்தது எல்லாம் நடிப்பு மட்டுமே.
உங்களுக்கு செய்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னை தீனியாக்கிவிடாதீர்கள். நான் எனது அடுத்தடுத்த படங்களில் தயாராகி வருகிறேன். அடுத்தப்படியாக நான் கொம்பன் படத்தில் நடித்து வருகிறேன்.
மெட்ராஸ் படத்திற்கு நிறைய பாராட்டு கிடைக்குது. இந்தப்படத்தில் நடிக்கும்போது, பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படமே சரியாக ஓடமாட்டேங்குது, ஒரு சுவரை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இது சரியாக வருமா என்று எண்ணியது உண்டு. ஆனால் இப்போது நிறைய பாராட்டுகள் கிடைக்குது.
எனது அண்ணன் சூர்யா படத்தை பார்த்து பாராட்டினார். ரிஸ்க் எடுத்து நடிச்சுருக்க என்றார். எங்கப்பா மெட்ராஸ் படத்தின் இயக்குநர் மற்றும் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் இப்படம் படம் நிறைய பேசினார். ஆனால் என்னிடம் இன்னும் பேசவில்லை. அவர் எப்போது பேசுவார், என்ன பேசுவார் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.
இவ்வாறு கார்த்தி பேசினார்.