தீபாவளி போட்டி…ஐ விலகுமா…?

i-teaser-review-591x357-350x211தீபாவளியன்று ஐ, கத்தி, பூஜை ஆகிய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கத்தி, பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு கண்டிப்பாக வெளிவரும் என்று சொல்லப்பட்டு, அந்தப் படங்களின் தீபாவளி வெளியீடு விளம்பரங்களும் வர ஆரம்பித்து விட்டது. ஆனால், ஐ படம் பற்றி எந்த சத்தத்தையும் காணோம்.

அர்னால்ட்டை வைத்து ஐ படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தி ஒரு பத்து நாட்களுக்கு படத்தைப் பற்றி பரபரப்பாக பேச வைத்தார்கள். தெலுங்கில் ஜாக்கி சான் வந்து இசையை வெளியிடப் போகிறார் என்று செய்திகளும் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.

பொதுவாக, பிரம்மாண்டமான அல்லது பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் மற்ற மொழிகளிலும் ஒரே தேதியில் வெளியாவதுதான் வழக்கம். ஐ தெலுங்கு இசை வெளியீடு பற்றி செய்திகள் வெளியாகியும் அதன் பின் அப்படி ஒரு விழா நடக்குமா, நடக்காதா என்று தயாரிப்புத் தரப்பிலிருந்து எந்தவித செய்தியும் வெளியாகவில்லை.

20000 திரையரங்குகளில் வெளியாகும் என்றெல்லாம் செய்தியைப் பரப்பிவிட்டு தற்போது வெளியீட்டுத் தேதியை இன்னும் சரியாக சொல்லாமல் இருக்கிறார்களே என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐ படத்தின் டீஸர் கூட பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் படம் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். ஒரு சில வாரமோ அல்லது வாரங்களோ தள்ளித்தான் ஐ வெளியாகும் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நவம்பரில்தான் ஐ வெளிவர வாய்ப்புள்ளது.

நவம்பர் மாதம் உத்தம வில்லன், காவியத் தலைவன் ஆகிய படங்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதெல்லாம் பெரிய படங்கள் சென்னையில் மட்டுமே 50 திரையரங்குகளில் வெளியாவதால் ஐ படம் அதற்கும் அதிகமாகவே வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

தீபாவளி வெளியீட்டில் கத்தி, பூஜை ஆகிய படங்கள் இப்போதே முழுவதுமாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். அதனால் ஐ படத்திற்கு சென்னையில் 50 திரையரங்குகள் தற்போதுள்ள நிலையில் கிடைப்பது கடினம் என்கிறார்கள். அதனால் ஐ படம் தள்ளிப் போவது உறுதி என்றே சொல்கிறார்கள்.

ஐ படத்தை சோலோ ரிலீஸ், அதாவது தனியாக மட்டுமே ரிலீஸ் செய்யும் எண்ணம் தயாரிப்பாளருக்கு உள்ளது என்றும் சொல்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் தற்போது காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.