இந்த வாரம் இத்தனைப் படங்களா….?

padamதமிழ் சினிமா எங்கே போய்க் கொண்டிருக்கிறதென்றே தெரியவில்லை. ஃபிலிமில் எடுக்கப்பட்டு வந்த சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பின் அனுபவம் இல்லாத பலரும் திரைப்படங்களை எடுக்க வந்து விட்டனரோ என்றுதான் தோன்றுகிறது.

கடந்த சில வருடங்களாக குறும் படங்களை இயக்கிய சில இளைஞர்கள் வித்தியாசமான படங்களை குறைந்த செலவில் இயக்கி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதும் இதற்கு வித்திட்டு விட்டது. ஆனால், அப்படிப்பட்ட தொடர் வெற்றி அவர்களைப் பார்த்து வந்த மற்ற குறும் பட இயக்குனர்களுக்குக் கிடைக்கவில்லை.

ஒரு பக்கம் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பல கோடி செலவில் தயாராகிக் கொண்டிருக்க, மறு பக்கம் ஒரு கோடிக்குள்ளும் படங்களை தயாரிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.நிறைய படங்கள் வெளிவருவது நல்ல விஷயம்தான், ஆனால் அவற்றில் எத்தனைப் படங்கள் தரமான படங்களாக இருக்கின்றன என்பதுதான் கேள்விக்குறி.

இந்த வருடத்தில் பல சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்தன. அவற்றில் எல்லாம் எந்த நட்சத்திர அந்தஸ்தோ, மிகப் பெரிய விளம்பரமோ இல்லாமல் வெற்றி பெற்ற ஒரே படம் ‘கோலி சோடா’ மட்டுமே.

அதன் பின் வெளிவந்த பல படங்கள் ஒரு நாள், இரண்டு நாள் ஓடினால் கூட பரவாயில்லை, சில படங்கள் தியேட்டருக்கு ஆள் வராமல் காட்சிகள் நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை வாரா வாரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வரும் வெள்ளி, அக்டோபர் 10ம் தேதியன்று வெளிவர உள்ள படங்களாக, ”பண்டுவம், குபீர், யாவும் வசப்படும், ஜமாய், நீ நான் நிழல், வெண்நிலா வீடு, முயல், ஆலமரம்” ஆகிய படங்கள் இன்றைய தேதியில் விளம்ரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் எந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறப் போகிறது என்பது வெளியான சில நாட்களுக்குப் பின்னர்தான் தெரிய வரும். வெளி வரும் வரை சிறிய படங்களாக இவை கருதப்பட்டாலும் வெற்றி பெற்றால் பெரிய படங்கள் என்று அழைக்கப்படவும் வாய்ப்புகளுண்டு.