அதிக செலவு செய்து எடுக்கப்படும் படங்களைப் பெரிய படங்கள் என்றும், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை சிறிய படங்கள் என்றும் அழைப்பதுதான் வழக்கம். ஆனால், ஒரு படத்தை வெளியீட்டிற்குப் பின்னரே தரம் பிரிப்பதே சிறந்தது. பல நேரங்களில் பெரிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்து விடலாம். சிறிய படங்கள் வசூலில் சாதனை புரிந்து பெரிய படங்களாக அமைந்து விடலாம்.
இருந்தாலும், வெளியீட்டிற்குப் பின்னர் என்பதை திரையுலகித்தினரும் பிரித்துப் பார்ப்பதில்லை, ரசிகர்களும் பிரித்துப் பார்ப்பதில்லை. தீபாவளிக்கு கத்தி, பூஜை படங்கள் மட்டுமே வெளிவரும் என்ற சூழ்நிலையில் நவம்பர் மாதம்தான் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த ரிலீஸ் மாதமாக அமையப் போகிறது.
கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன், ஷங்கரின் பிரம்மாண்டமான ஐ, வசந்தபாலனின் காவியத் தலைவன் ஆகிய படங்கள் வெளிவரும் என்பது அநேகமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.
எப்படியும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இந்தப் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. உத்தம வில்லன் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்தடுத்து ஐ, காவியத் தலைவன் ஆகிய படங்கள் வெளியாகலாம் என்கிறார்கள்.
ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வசந்தபாலன், தன்னுடைய கனவுப் படமாக காவியத் தலைவன் படத்தை உருவாக்கியிருக்கிறார். தற்போது பட வெளியீட்டில் குருவுடனேயே மோத வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கத்தி, பூஜை படங்கள் மாபெரும் வெற்றி பெற்று விட்டால் எப்படியும் நவம்பர் இரண்டாவது வாரம் வரை மேற் சொன்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். தமிழ் நாட்டில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான திரையரங்குகளே உள்ளதாம்.
கத்தி படம் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், பூஜை சுமார் 300 திரையரங்குகளிலும் வெளியாகலாம் என்கிறார்கள். இந்தப் படங்கள் ஓடி முடிந்தால்தான் அடுத்து நவம்பரில் புதிய படங்களைத் திரையிட வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். அதனால், தீபாவளி படங்களின் வரவேற்பைப் பொறுத்தே மற்ற படங்களின் வெளியீடு அமைய வாய்ப்புள்ளது.