மெட்ராஸ் படத்தில் ஹீரோ கார்த்திக்ற்கு இணையான கேரக்டரில் நடித்திருப்பவர் கலையரசன். அசல் வடசென்னை இளைஞனராக அவர் நடித்திருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஆனால் இது அவருக்கு முதல் படமல்ல. தான் கடந்த வந்த பாதையை இங்கே சொல்கிறார்…
நான் நிஜத்திலும் பக்கா திருவெற்றியூர் பையன். சின்ன வயசுலேருந்தே நடிப்பு மீது காதல். டான்ஸ், நடிப்பு, பைட்டுன்னு நிறைய கத்துக்கிட்டேன். கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்க செலக்ட் ஆனேன். ஆனால் வீட்டு கஷ்டத்தை போக்க அதைவிட்டுவிட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.
ஆனால் என்னால முடியல. கூட வேலை பார்த்த சண்முகப்ரியாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவுங்க வேலைக்கு போயி வீட்டை கவனிக்க ஆரம்பிச்சதால என் வேலையை விட்டுவிட்டு சினிமா வாய்ப்பு தேடினேன்.
பொண்டாட்டி சம்பாத்தியத்துல சாப்புடுறவன் என்கிற அவமானம் துரத்திச்சு. போட்டோவை கொடுத்துட்டு போங்க சொல்லி அனுப்புறோம்னு நாகரீகமாக விரட்டி அடிச்சாங்க. முதன் முதலா அர்ஜுனன் காதலி படத்தில் ஜெய்யோட பிரண்டா நடிச்சேன். என் கெட்ட நேரம் அந்த படம் ரிலீசாகல. அடுத்து நந்தலாலாவுல சின்ன கேரக்டர்ல நடிச்சேன். அப்புறம் முகமூடியில ஜீவாவோட பிரண்டா நடிச்சேன்.
அட்டகத்தி ரஞ்சித் நட்பு கிடைச்சுது. அட்டகத்தி படத்துல ஒரு சீன்ல நடிச்சேன். அதுக்கு பிறகு மதயானை கூட்டத்தில் ஹீரோவுக்கு அண்ணனா நடிச்சேன். இப்படி கிடைக்கிற வேஷத்துல நடிச்சேன். கடைசியில் என்னை அடையாளம் காட்டியது மெட்ராஸ்.
இன்னிக்கு எல்லோரும் பாராட்டுறாங்க. இந்த பாராட்டுக்கு பின்னாடி கிடைத்த அவமானங்களும், காத்திருத்தல்களையும் மனசுல வச்சு தொடர்ந்து நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். என்கிறார் கலையரசன்.