தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரனை ‘சிறார் போராளி’யாக தவறாக சித்தரித்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எடுக்கப்பட்ட ‘புலிப்பார்வை’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் – இளைஞர் அமைப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் அங்கம் வகிக்கும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய மாணவர் – இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
நிகழவிருக்கும் விபரீதத்தை உணர்ந்த படத் தயாரிப்பாளர், அவசர அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து, ‘புலிப்பார்வை’ வெளியீட்டை ஒத்திவைப்பதாகவும், வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் ஆட்சேபிக்கும் அம்சங்களை படத்திலிருந்து அகற்றிவிட்டு, அவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, அவர்கள் சம்மதித்தால் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்றும், அவர்கள் சம்மதம் தராத பட்சத்தில், எத்தனை கோடி நஷ்டம் வந்தாலும் சரி… படத்தை வெளியிடாமல் விட்டுவிடுவோம் என்றும் அறிவித்தார்.
ஆனால், அவர் சொன்னதுபோல் செய்யாமல், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினருக்கு படத்தை போட்டுக் காட்டாமலே, அவர்களது சம்மதத்தைப் பெறாமலே, தீபாவளிக்கு படத்தை வெளியிடப் போவதாக விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார்.
இதனால் கொந்தளித்த மாணவர் – இளைஞர் அமைப்பினர், திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து, இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று மனு கொடுத்தனர். மேலும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் திங்களன்று சென்னையில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இந்நிலையில், கூட்டமைப்பினருக்கு நேற்று திங்கள் மாலை படத்தை போட்டுக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை பிரசாத் திரையரங்கில் நடைபெற்ற இந்த திரையிடலுக்கு, கூட்டமைப்பைச் சேர்ந்த கோவை ராமகிருஷ்ணன், தியாகு, வீரலட்சுமி, கவுதம், பிரபாகரன், பிரதீப், செம்பியன் மனோஜ்குமார் மற்றும் பலர் வந்திருந்தனர்.
மாற்றியமைக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட ‘புலிப்பார்வை’ படத்தைப் பார்த்த தமிழினப் பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம், பாலச்சந்திரன் கதாபாத்திரம் அணிந்திருந்த புலிகளின் சீருடையை நீக்கி, சாதாரண உடையை அணிவித்ததைத் தவிர, படத்தில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவே இல்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்துள்ளார்கள்.
படத்தில், சீருடையைத் தவிர வேறு எதையும் மாற்றவில்லை. ‘புதைந்த கண்ணிவெடிகளை எடுத்து வந்து புலிகளிடம் கொடுத்து பணம் வாங்கும் அளவிற்கு ஈழத்தமிழ் மக்கள் வறுமையில் வாடினார்கள்’ என்பது உட்பட, இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அத்தனை அம்சங்களும் அப்படியே இருக்கின்றன. தமிழ் இனத்துக்காகவும், ஈழத்துக்காகவும் போராடுகிற எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத படம் ‘புலிப்பார்வை’. இந்த படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது. அனுமதிக்க மாட்டோம்” என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.