பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், ரிகார்டிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இளையராஜா தாக்கல் செய்த மனு: என் இசை அமைப்பு, ஒலிப்பதிவு, பாடல்களுக்கு, முழு பதிப்புரிமையும் எனக்கு தான் உள்ளது. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல், பக்தி பாடல்களையும், ஒலிப்பதிவு செய்துள்ளேன். ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட உரிமை, காலாவதியாகி விட்டது. அவற்றை புதுப்பிக்காமல், உரிமை கொண்டாட முடியாது.
எனவே, என் பாடல்கள், ஒலிப்பதிவில், எனக்கு உள்ள உரிமையில் குறுக்கிட, ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள, நரசிம்மன் ஏஜி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிகார்டிங் நிறுவனம், அரியானாவில் உள்ள யூனிசிஸ் இன்போ சொலுஷன், மும்பையைச் சேர்ந்த, கிரி டிரேடிங் நிறுவனம், மலேசியாவில் உள்ள ஏஜி மியூசிக் நிறுவனம் ஆகிய, ரிகார்டிங் நிறுவனங்களுக்கு எதிராக, இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, கடந்த மாதம், நீதிபதி தமிழ்வாணன் முன், விசாரணைக்கு வந்தது. ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, தடை விதித்து, நீதிபதி தமிழ்வாணன் உத்தரவிட்டார். இதையடுத்து, இம்மனு, நேற்று, நீதிபதி சுப்பையா முன், விசாரணைக்கு வந்தது. தடையை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை, 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.