பாரதி ராஜாவுக்கு அமெரிக்க விருது

நியூ யார்க் நகரில் அமெரிக்க தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பாரதிராஜாவுக்கு அமெரிக்க வின் நாஸ்சவ் கவுன்டி மேயர் எட்வர்ட் மங்கனோ வழங்கிய விருதில் பாரதிராஜா தமிழ்ப் பட உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்டது.

தமிழ்ப் பட இயக்குனர்கள் ஒரு காலகட்டத்தில் வெளிநாடு சென்று படப்பிடிப்பு செய்தபோது இவர் யாரும் பார்த்திராத அருகே உள்ள கிராமத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார்.

தன் சாதனைகளுக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய விருதுகளைப் பெற்றவர்; காதல் கதைகளையும் சமூக சிந்தனை உள்ள திரைப் படங்களையும் இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று பாராட்டியது அந்த அமைப்பு.

விழாவில் சிறப்புரை ஆற்றிய பாரதிராஜா சர்வதேச அளவில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றார். திருமணம் ஆகி புகுந்த வீடு செல்லும் மணப்பெண், பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் நல்ல பெயர் எடுப்பதைப் போல் புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளனர் என்றார்.

தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்த இயக்குனர், தன் தாயின் ஆதரவும் ஆசியுமே தன் வெற்றிக்கு கரணம் என்றார். தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களின் மூளை போற்றப்படும் என்றும் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பெரும் பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்க இதுவே காரணம் என்றும் கூறினார்.

சென்னையில் இருந்து காணொளி மூலம் அமெரிக்க சங்க தலைவர் பிரகாஷ் எம் ஸ்வாமி, பாரதிராஜாவின் சாதனைகளைப் பாராட்டிப் பேசினார். அமெரிக்காவில் உள்ள மதுரை மருத்துவக் கல்லுரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மருத்துவர் சுந்தர் செல்வராஜ், மருத்துவர் மதன் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டது. கவிஞர் அருள் வீரப்பன், எட்கர் ரொசாரியோ, ரமேஷ் ராமநாதன் ஆகியோர் வாழ்த்தினார்கள்.

அமெரிக்க தமிழ்ச் சங்க துணைச் செயலர் வீரா குமார் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க வெள்ளி விழாவில் கலந்து கொள்ள வந்த டைரக்டர் நியூ யார்க் வந்ததன் காரணமே அவர் ரசிகர்கள் மீது கொண்ட பாசம்தான் என்றார்.

சங்கப் பொருளாளர் கோஷி ஊமன் இயக்குனருக்கு பொன்னாடை போர்த்தினார். சங்கச் செயலர் ஜெயா சுந்தரம் வரவேற்புரை வழங்க துணைத் தலைவர் கலை சந்திரா நன்றி கூறினார்.

விழாவில் தீபாவளியை முன்னிட்டு வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இயக்குனர் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.