விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியவர் S.D.ரமேஷ்செல்வன்.
இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘வஜ்ரம்’ என்று பெயரிட்டுள்ளார். இதில் ‘பசங்க’, ‘கோலிசோடா’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சனா, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு பைசல் இசையமைக்கிறார். படத்தை ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரமேஷ்செல்வனிடம் கேட்டபோது, “இன்று உலகம் முழுக்க பிரச்சனையாகி வருவது வருங்காலத்தினரின் அடிப்படைத் தேவையான கல்வி பற்றிதான். இன்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையே கல்விதான். இதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறோம்.
கேட்டு வாங்கவேண்டிய உரிமை கொண்ட கல்வியை, பணம் கட்டி பெற்றுக் கொண்டிருக்கிற அவலம்தான் இன்றைய தலைமுறையினரின் தலையாய பிரச்னை. இதைத்தான் இந்தப் படத்தில் கமர்ஷியல் கலந்து கொடுத்திருக்கிறோம்.. படத்தின் படப்பிடிப்பு சென்னை, மூணார், சாலக்குடி மற்றும் அசாம் மாநிலத்திலும் நடக்கவுள்ளது…” என்றார்.