கவுண்டமணியின் ’49 ஓ’ இம்மாதம் வெளியீடு …?

49கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ’49 ஓ’ படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த கவுண்டமணி நடித்துள்ள இந்தப் படத்தை கௌதம் மேனனின் உதவியாளரான ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெளியிடப்பட்டது. தேர்தல் முடிந்ததும் படம் வெளியாகும் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில பல காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டேயிருந்தது.

தற்போது படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம். படத்தை எப்படியும் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிட்டு விடலாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதற்கு முன்பாக இதுவரை பத்திரிகையாளர்களை அதிகமாக சந்திக்காத கவுண்டமணியை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தி விட்டால் படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்களாம்.

ஆனால், தன்னுடைய படத்தைப் பற்றி இதுவரை மீடியாக்களிடம் பேசாத கவுண்டமணி இதற்கு சம்மதிப்பாரா என்பதுதான் சந்தேகமாக உள்ளதாம். இன்றைய சூழ்நிலையை அவருக்கு எடுத்துச் சொல்லி எப்படியாவது அவரை மீடியாக்கள் முன் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம்.

அந்த முயற்சியில் கலக்கப் போவது கவுண்டமணியா, அல்லது கலங்கப் போவது தயாரிப்பு நிறுவனமா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.