விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிப்போரின் போது இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்களை சொல்ல வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த ‘புலிப்பார்வை’.
பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்து வைத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு திட்டம் தீட்டியதை பற்றியும், இறுதிக்கட்டப் போரின் போது, ராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட பாலச்சந்திரன் எதற்கும் அஞ்சாமல் வீரத்தின் அடையாளமாக இருந்த அவனுடைய வாழ்க்கையையும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
வெடிச் சத்தத்தின் நடுவே, ஆபத்தான சூழ்நிலையிலும் ஒரு போராளிக்கும், கண்ணிவெடியை அகற்றும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அழகான காதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். இறுதியில், போராளிகளுக்கு காதலை விட மண்ணைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்பதையும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
இவர் என்ன நினைத்து எடுக்க நினைத்தாரோ அதை முழுமையாக சொல்ல முடியாமல் போனது போல் படம் பார்க்கும் போது தெரிகிறது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பற்றிய கதை என்பதால், பிரபாகரனை சுற்றி கதை நகரவில்லை. அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் மதனுக்கும் பெரும்பாலான காட்சிகள் இல்லை.
முதல் பாதியில் இலங்கை ராணுவ அதிகாரி பேசும் வசனங்களுக்கு காட்சியமைத்த விதம் சரியாக பொருந்தவில்லை. பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை மையப்படுத்தி வெளி வந்த படங்களில் இப்படமும் முக்கிய இடம்பெறும் என்பது நிதர்சனமான உண்மை. மொத்தத்தில் புலிப்பார்வை மிரட்டல் குறைவு.