நாட்டின் தலைச் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி கடந்த 18.11.2014 அன்று தமிழகத்தில் தனது சொந்த ஊரான செஞ்சியில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும்.
யாப்பிலக்கணத்தில் தலைச் சிறந்த கவிஞர் என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கவிஞர் தீப்பொறி சிலாங்கூர், கோலாசிலாங்கூர் அருகில் உள்ள புக்கிட் ரோத்தான், ரோஸ்வெல் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவராவார்.
தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைக் கற்ற இவர் பின் அதே தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார். பின்னர் பத்தாங் பெர்ஜுந்தை, மேரி தோட்டத்திற்கு இடம் மாற்றலாகி, அத்தோட்டத்தில் வேலை செய்தார். அதன் பின்னர் பத்தாங் பெர்ஜுந்தை, பெர்ஜுந்தை ஈயச் சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். தோட்டத்தில் கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த ஆட்டக்காரராகவும் அவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1976-ஆம் ஆண்டு கோலாலம்பூருக்கு வந்த அவர், ஜாலான் அம்பாங்கில் உள்ள தமிழ் நேசன் நாளிதழில் பிழைத்திருத்தும் பகுதியில் வேலை செய்து வந்தார்.
தோட்டத்தில் இருக்கும் போதே தந்தை பெரியாரின் எழுத்துகள் மற்றும் பேச்சுகளில் மூலம் தீப்பொறி பெரிதும் ஈர்க்கப்பட்டார். மலேசியத் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு சாதி ஒழிப்புப் போராட்டம், சீர்திருத்த திருமணங்கள் போன்றவற்றில் பங்கு கொண்டவர்.
நல்ல தரமான கவிஞர்கள் உருவாக வேண்டும் என்பதில் தீவிர போக்கு கொண்டிருந்த அவர், தமிழ் நேசனில் வேலை செய்து கொண்டே, அவரது பெயரிலேயே பொன் பாவலர் மன்றம் என்ற கவிஞர் பட்டறை இயக்கத்தை நடத்தி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாப்பிலக்கணத்தையும் கவிஞர் பட்டறையையும் நடத்தி வந்தார். அவரிடம் யாப்பிலக்கணத்தைக் கற்று உருவான பத்து கவிஞர்கள் இன்னமும், அவர்களின் பெயருக்கு முன் தங்கள் குருவான பொன்னுசாமியை நினைவுக்கூரும் வகையில் பொன் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் அண்மையில் மறைந்த கவிஞர் பொன் நாவலன் குறிப்பிடத்தக்கவர்.
அவரது கவிதைகள் அனல் பறக்கக்கூடியவை என்பது எழுத்தாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமிழ் நேசனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை ஞாயிறு பதிப்பில் எழுதியுள்ளார். இவரது முதல் நூல் தீப்பொறி என்பதால் அவரது பெயருக்கு முன் தீப்பொறி என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார். இதுவரை 5 கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
வானொலியில் இடம்பெற்று வந்த கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளில் தீப்பொறி முக்கிய பங்காற்றியுள்ளார். ஆகக்கடைசியாக இவர், மலேசிய நண்பன் நாளிதழில் பிழைத்திருத்தும் பகுதியில் பணியாற்றி வந்தார். இவருக்கு பொன் கோமகன், பொன் கோமளம், பொன் கோகிலம் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தன்மானத்தின் சின்னமாகவும் சுயமரியாதையைப் பின்பற்றுபவராகவும் திகழ்ந்த இவர், முன்கோபம் கொண்டவர். தீப்பொறிகளைச் சிந்தனையில் வைத்துச் சிறகடித்தவர். மூச்சால் உணர்வுகளைச் சுவாசித்து உணர்வுகளைப் பேனா முனையால் பதிவு செய்தவர். முரண்பாடுகளுடன் முட்டி மோதிய இவரை வேண்டாதவரும் விரும்ப வேட்கை கொள்ள வைத்தவை அவரது பதிவுகள்தான். சுயநலத்திற்கு அப்பாற்பட்ட வகையில் தமிழர்களின் தாகத்தைத் தனது மூச்சாக கொண்டிருந்த அவர் நமக்கான பாரதியாவார்.
அன்னாரின் பிரிவால் துயருரும் அவர்தம் குடும்பத்தினருக்குச் செம்பருத்தி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
உங்க்ளியா கோல்டு
காட் என் கஊப்பிட்டாலும் சிரிப்பாய் அநத புன்னைகையை இனி எங்கே பார்ப்பேன். . பொன் கோகிலம் தளர வேண்டாம் . உ7நாக்காக பலர் இருக்கிறார்கள் . விடாதே பிடிசுக்கோ என் என்னை நோக்கி தீப்பொறியார் உன்னிடம் சொன்ன போது அப்போது விளங்கவில்லை .
உங்களின் அன்பின் வெளிப்பாடாக, பதிவாகியுள்ள அனுதாபங்களையும் நினைவலைகளையும் கண்டு மகிழ்கிறேன். நன்றி. இந்த தளத்தை அமைத்துக் கொடுத்த செம்பருத்திக்கும் நன்றி
அன்புடன் பொன் கோகிலம்