காடு – விமர்சனம்!

நாடு வளர காடு எந்த அளவுக்கு அவசியம் என்பதை துணிச்சலான காட்சிகளோடு நமக்கு உணர்த்தும் திரைப்படம் காடு. காட்டைப் பூர்வீகமாக கொண்டு வாழும் மக்களை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு, கடத்தல்காரர்களுக்கு காட்டு மரங்களை தாரைவார்க்கும் பணத்தாசைப் பிடித்த அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் சவுக்கடி என்றும் இப்படத்தை சொல்லலாம்.

‘எங்கள் வாழ்க்கைக்காகத் தான் காட்டிலிருந்து விறகு எடுக்கிறோம், நாங்க வசதியா வாழ்றதுக்காக காட்டிலிருந்து ஒரு செடியக்கூட எடுக்கமாட்டோம்’ என்ற ஒரே வசனத்தில் விளங்கிவிடுகிறது வேலு என்கிற வித்தார்த் கதாபாத்திரம். வேலுவும் கருணாவும் நண்பர்கள். இருவருமே காட்டிலிருந்து விறகு எடுத்து வியாபாரம் செய்து வருகிறவர்கள்.

கருணா படித்தவன். அந்த காட்டுக்கு அரசு அதிகாரியாக வேண்டும் என்பதே அவனது கனவு. அதற்காக பல முயற்சிகளை செய்கிறான். லஞ்சமாக பல லட்சம் கேட்கிறார்கள். பணத்தை சேகரிக்க சந்தன மரங்களை கடத்துகிறான். உண்மை தெரிந்துவிட, தன் நண்பன் வேலுவின் மீது பழியைப்போட்டு, அவனை போலிசில் ஒப்படைத்து தன்னை நல்லவனாக காட்டிக்கொள்கிறான். அரசாங்க அதிகாரிகளிடம் நல்ல பெயரை வாங்கி தான் கனவு கண்ட அரசு வேலையையும் பெற்றுவிடுகிறான்.

கடத்தல் தொழில்செய்யும் களவாணிகள் கருணாவை விலைக்கு வாங்குகிறார்கள். காட்டை நம்பி வாழ்வு நடத்தும் மக்களை விரட்டியடித்து, எந்த தொல்லைகளும் இல்லாமல் மரங்களை கடத்தி பணம் சம்பாதிப்பது தான் கருணாவின் திட்டம்.

சிறை இருக்கும் வேலு, அங்கு எழுத்தாளர் நந்தனை (சமுத்திரகனி) சந்திக்கிறான். தவறு செய்கிறவனைப் பார்த்து விலகி போகாதே, திருப்பி அடி என்ற அரசியல் பாடத்தை சிறையில் கற்றுக்கொள்கிறான் வேலு.

 

வெளியே வந்தவன் தன் மக்களை, தான் வாழும் காட்டையும் சதிகாரர்களிடமிருந்து காப்பாற்றுவது தான் க்ளைமாக்ஸ். காட்டைப் பாதுகாக்க என்ன வழிகள் இருக்கிறது என்ற பல நியாயமான யோசனைகளையும் ‘காடு’ திரைப்படம் முன்வைக்கிறது.

 

காட்டில் வாழும் மக்கள் என்னென்ன கொடுமைகளை சந்திக்க வேண்டிய அவசியங்கள் ஏற்படுகிறது என்பதை முதல் பாதியின் சில காட்சிகளில் விளக்குகிறார் இயக்குனர் ஸ்டாலின். கமர்ஷியல் சினிமாவுக்கான சில அம்சங்களும் படத்தில் இருக்கிறது. காதல் படத்தில் இருந்தாலும் அதை தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடலமைப்போடும் இயல்பான நடிப்போடும் ரசிக்க வைக்கிறார் வித்தார்த். தங்கள் உரிமையைக் காக்க அவர் உரக்கக்கத்தி பேசும் வசனங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயமான நடிப்பைக் கொடுத்து மரியாதை செய்திருக்கிறார் சமுத்திரகனி. படத்தில் அவர் கதாநாயனுக்கு சொல்லும் ஒவ்வொரு வரியும் படம் பார்ப்பவர்களுக்கு சொல்லும் பாடம்.

சிறையில் தெருக்கூத்து கலைஞராக வந்து மிரட்டலான நடிப்பைக் கொடுக்கிறார் அந்த பெரியவர். சீரியசான காட்சிகளுக்கு நடுவில் வாய்விட்டு சிரிக்க சில வாய்ப்பை வழங்குகிறார்கள் தம்பி ராமய்யாவும் சிங்கம் புலியும்.

 

‘யாதும் எங்கள் ஊர் என்று பாட்டன் சொல்லக் கேட்டோமே, ஊரை விட்டுப் போ என்றால் யாரும் போக மாட்டோமே’ என்ற யுகபாரதியின் ஆழமான வரிகள் படத்தில் இருக்கும் நுட்பமான அரசியலை சொல்கிறது. ‘உன்னபத்தி நனச்சாலே…’ என்ற காதல் பாடல் கே இசையில் இதயத்தை இதமாக்குகிறது.

 

இயக்குனர் ஸ்டாலின் படம் எடுத்திருக்கிறார் என்பதைவிட ‘காடு’ அவசியமானது என்பதையும் அதை பாதுகாக்க என்ன வழிகள் என்பதையும் உணர்த்த ஒரு பாடத்தை எடுத்திருக்கிறார்.

காடு – படம் அல்ல,  பாடம்!
-http://cinema.nakkheeran.in