தி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை

sony_the_interview
தி இண்டர்வியூ திரைப்படத்தின் இணைய கட்டண விவரம்

 

சோனி நிறுவனம் தயாரித்து சர்வதேச அளவில் சர்ச்சையில் சிக்கி தாமதமாக வெளியிடப்பட்ட தி இண்டர்வியூ (The Interview) திரைப்படம் மூன்றே நாட்களில் இணையத்தில் மட்டும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் அமெரிக்க டாலர் வருமானத்தை அள்ளிக்குவித்திருக்கிறது.

இந்த மூன்று நாட்களில் இருபது லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

இதன்மூலம் சோனி நிறுவனம் இதுவரை இணையத்தில் வெளியிட்ட திரைப்படங்களிலேயே அதிக அளவு வருமானத்தை ஈட்டிய திரைப்படம் என்கிற பெருமையை தி இண்டர்வியூ திரைப்படம் பெற்றிருக்கிறது.

வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னைக் கொல்வதற்கு அமெரிக்கா தீட்டும் கற்பனைத் திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதலில் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நாளில் திரையிடப்படாமல் இடை நிறுத்தப்பட்டது.

இந்த திரைப்படத்தால் கோபமடைந்த வட கொரியா சோனி ஸ்டுடியோவின் இணையதளத்தில் மிகப்பெரிய சட்டவிரோத இணைய அத்துமீறல்களையும் தாக்குதல்களையும் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

அப்படியான இணையத் தாக்குதல்களை நடத்தியதாக கூறிக்கொண்ட அமைதிக்கான பாதுகாவலர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட குழுவினர், சோனி நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட பல அதிமுக்கிய ரகசியத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டனர். சோனி நிறுவனம் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் திரைக்கதை, வசனங்கள், சோனி நிறுவனத்தின் ரகசிய மின்னஞ்சல்கள், நடிகர் நடிகைகளின் சம்பளங்கள் உள்ளிட்ட பல ரகசிய தகவல்கள் அப்படி இணையத்தில் வெளியிடப்பட்டன.

இறுதியாக இந்த குறிப்பிட்ட திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று தமக்கு வந்த எச்சரிக்கையை காரணம் காட்டி சோனி நிறுவனம் திட்டமிட்ட அன்று இந்த திரைப்படத்தை வெளியிடாமல் சோனி நிறுவனம் இடை நிறுத்தியது.

சோனி நிறுவனத்தின் மீது நடந்த இணையவழித்தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த தாக்குதல் வடகொரியாவிலிருந்து வந்ததாக தெரிவித்திருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்த வடகொரியா, இந்த இணையத்தாக்குதல் என்பது “நியாயத்திற்கான செயல்” என்று வர்ணித்திருந்தது.

இந்த திரைப்படம் அமெரிக்காவிலும் கேனடாவிலும் மட்டும் இணையத்தில் திரையிடப்பட்டதாக சோனி நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது. கூகுளின் யூ டியூப் மற்றும் கூகுள் பிளே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் வீடியோ மற்றும் சோனி நிறுவனத்தின் பிரத்யேக இணையதளம் வழியாக மட்டுமே இந்த திரைப்படத்தை ஒருவர் வாங்க முடியும்.

இந்த திரைப்படத்தை 48 மணி நேரத்திற்குள் பார்ப்பதற்கான வாடகைக்கட்டணமாக 5.99 அமெரிக்க டாலர்களும், ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படத்தை வாங்க 14.99 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக விலை நிர்ணயித்திருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. Sony said in a

இது தவிர, அமெரிக்காவின் முன்னணி திரையரங்கங்கள் இந்த திரைப்படத்தை திரையிட மறுத்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளியிடப்பட்ட திரையரங்கங்களில் இந்த திரைப்படத்தைக் காண பெருமளவு கூட்டம் வந்திருந்ததாகவும், சோனியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. -BBC