சினிமாவுக்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன்: விஷால்

‘பூஜை’ வெற்றி படத்தை தொடர்ந்து விஷால் தயாரித்து நடித்துள்ள ‘ஆம்பள’.

விஷாலுடன் ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதீஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் உட்பட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். விஷால்-சுந்தர்.சி இணையும் இரண்டாவது படம் இது. ஏற்கெனவே இருவரும் மத கஜ ராஜா என்கிற படத்தில் கைகோர்த்துள்ளனர். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே ‘ஆம்பள’ பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் அன்புச் செழியன் ஆகியோர் பாடல்களை வெளியிட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் ஆர்யாவும் பெற்றுக் கொண்டனர்.

விஷால் பேசும்போது, ”முதலில் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர்சியுடன் இணைந்து நடித்த ‘மத கஜ ராஜா’ .படம் இன்னமும் வெளிவரவில்லை. சினிமாவில் சென்டிமெண்ட் அதிகம். அதனால் பலரும் கேட்டார்கள். ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர் சியுடனா படம் பண்ணப்போறே? என்று பலபேர் கேட்டார்கள். இருந்தாலும் நான் தெளிவாக முடிவாக இருந்தேன். இந்த ‘ஆம்பள’ லைன் முன்பே சொல்லப்பட்டதுதான். சுந்தர்.சிக்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது.

செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல் தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப்படமும் முடித்தோம் எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.

நெருக்கடியில் பதற்றத்துடன் டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப் படுத்துவது இது கடைசிப் படமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச்செய்வது நல்லதல்ல. ஆனாலும் சுந்தர்.சி சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார். படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு. ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்…

முதன் முதலில் ஹன்சிகா என்னுடன் நடித்து இருக்கிறார். ஹன்சிகா ஜோடி என்றதுமே எனக்குப் பயம். அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு. கேமரா மேனுக்கு கஷ்டம் என்று நினைத்தேன். ‘நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு’ என்று பாட்டே வரும். இருந்தாலும் அவர் சமாளித்து எடுத்தார். சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன். திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன். “இவ்வாறு விஷால் பேசினார்.

-http://www.dinamani.com