குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு விஜய், சிவகார்த்திகேயன் நிதியுதவி

குழந்தை ஒன்றின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் விஜய் ரூ.2 லட்சம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

பால சுப்பிரமணியம் என்ற 1 வயது குழந்தை எலும்பு தொடர்பான நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், அந்த குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் முகவரியுடன் தகவல்கள் பகிரப்பட்டன.

அத்துடன் Help Baby Bala – Bone Marrow Transplatation Operation என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கமும் ஆரம்பிக்கப்பட்டு, அக்குழந்தையின் புகைப்படத்துடன் தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன. இந்தத் தகவலை அறிந்த நடிகர் விஜய் உடனடியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தனது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் மூலமாக அக்குழந்தையின் சிகிச்சைக்கு வழங்கியுள்ளார்.

அதுபோல இந்த குழந்தைக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் உதவ முன்வந்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, பலர் இந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவ முன் வந்துள்ளார்களாம். இதுவரை 4 லட்ச ரூபாய் வந்திருக்கிறது. இன்னும் 16 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என்கிறார் அக்குழந்தையின் தந்தை முருகன்.

-http://www.dinamani.com