லிங்கா திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் நடத்த திட்டமிட்டுள்ள அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய சென்னை மாநகர போலீஸ் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் சிங்காரவேலன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த மாதம் 12-ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் வநியோகிப்பதற்காக உரிமத்தை எங்கள் நிறுவனம் பெற்றிருந்தது.
இதற்காக, திரையங்க உரிமையாளர்களிடமிருந்து ரூ 8 கோடி தொகை பெற்றும் விநியோகஸ்தர் உரிமம் பெற்றிருந்தோம். ஆனால், இந்தத் திரைப்படம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், படம் வெற்றி பெறவில்லை.
இதனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யக் கோரி திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு கோரிக்கை மனு அளித்தோம்.
ஆனால், அதற்கு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், லிங்கா திரைப்படத்தால் திரையங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வலியுறுத்தி ஜனவரி 10-ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்
இதற்காக அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு மனு அளித்தோம். ஆனால், எங்களது மனுவை அவர்கள் ஏற்கவில்லை. எனவே, ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இதே போன்று விஜயபார்கவி என்டர்டெய்ன்மென்ட், சுக்ரா பிலிம்ஸ் உள்பட மூன்று நிறுவனங்கள் மேலும் மனுத் தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் அளித்த கோரிக்கையை ஜனவரி 9-ஆம் தேதி காலை 11 மணிக்குள் சட்ட விதிகளுக்குள்பட்டு பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
-http://www.dinamani.com
லிங்கா பட பிரச்னையில் ரஜினி தலையிட வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை
லிங்கா திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்க்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் சிங்காரவேலன், கேப்ரிகான் பிக்சர்சஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் சாய், சந்திரகலா மூவிஸ் நிர்வாகப் பங்குதாரர் ரூபன், திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் ரவிகணேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களிடம் சென்னையில் வியாழக்கிழமை கூறியது:
படையப்பா, எந்திரன் ஆகிய படங்கள் பெற்ற வெற்றியை விட லிங்கா படம் பெரும் வெற்றியைப் பெரும் என்று கூறி மாநிலத்தின் பல பகுதிகளிலும் வியாபாரம் செய்யப்பட்டது. உதாரணமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட திரையரங்குகளை உள்ளடக்கி பகுதிக்காக, லிங்கா படத்துக்கு 9 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. 8 கோடிக்கு விநியோக உரிமை வாங்கப்பட்டது.
படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. 55 தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிட்டோம். அதில் மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் படம் பார்க்கமுடியும். ஆனால், 75 ஆயிரம் பேர்தான் படம் பார்த்தனர். இதனால் முதல் நாள் வசூல் 95 லட்சம் கிடைத்தது. அதற்கடுத்து, 55 லட்சம், 65 லட்சம் என வசூல் ஆகி கடைசியில் 86 ஆயிரம் மட்டுமே வசூல் ஆனது. புதன்கிழமை வசூல் நிலவரத்தின் படி, மொத்தம் 4.20 கோடி வசூல் ஆனது. அதில் எங்களுக்கான பங்குத்தொகை 2.60 கோடிதான். மீதி 5.40 கோடி எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக சுமார் 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லிங்கா படம் 45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, 220 கோடிக்கு வியாபாரம் ஆனது. அந்த லாபத்தில் இருந்துதான் நஷ்ட ஈடு கேட்கிறோம்.
இதுகுறித்து வேந்தர் மூவிஸ், ஈராஸ் நிறுவனம் எந்த பதிலையும் அளிக்காததால் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தோம். ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியை சந்திக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்ய நாராயணாவிடம் மனு கொடுத்தோம். அதற்கும் பதில் கிடைக்கவில்லை. காந்தப் படுக்கை, கலசம், மண்ணுளிப்பாம்பு போன்ற மோசடிதான் இதுவும்.
ரஜினியிடம் எதிர்பார்ப்பது என்ன
இதற்காக ரஜினி தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து எங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ரஜினி தலையிட்டால் இந்தப் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என்றுதான் சொல்கிறோம். ஆனால், ரஜினியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதற்காக லிங்கா படத்தால் திரையங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வலியுறுத்தி 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர் விநிóயோகஸ்தர்கள்.
-http://www.dinamani.com