பூஜாங் பள்ளத்தாக்கு: முக்ரீஸ் மகாதிர் யுனெஸ்கோவுக்கான ஆய்வு அறிக்கையை தயாரித்து விட்டாரா?

-ஜீவி காத்தையா, ஜனவரி 25, 2015.

 

Bujang valley8டிசம்பர் 1, 2013 இல் மலேசியாவின் கெடா மாநிலத்தில் 2000 ஆண்டு தொன்மை வாய்ந்த பூஜாங் பள்ளத்தாக்கு கலாச்சாரத்திற்கு மேலும் ஓர் அடி விழுந்தது.

அன்றைய தினத்தில் சுங்கை பத்து தோட்டத்தில் அமைந்துள்ள சண்டி என்று கூறப்படும், பூஜாங் பள்ளத்தாக்கின் புகழ் பெற்ற தலம் 11, கோயிலை ஒரு வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனம் உடைத்து விட்டது என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து கெடா மாநில அரசு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

கெடா கலை, கலாச்சாரம் மரபுரிமை குழுவின் தலைவரும் ஜித்ரா சட்டமன்ற உறுப்பினரும் கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அமிநுடின் ஒமார் தமக்கு இச்சம்பவம் குறித்து நேரடியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி சமாளித்தார்.

சண்டி 11 உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துரைத்த பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வுக் குழு என்ற அரசு சார்பற்ற அமைப்பின் தலைவரும் Bujang valley2பூஜாங் பள்ளத்தாக்கு வரலாற்று நூலின் ஆசிரியருமான வி. நடராஜன் வரலாற்று சிறப்பு மிக்கதும் சுற்றுப்பயணிகளை மிகவும் ஈர்த்த பூஜாங் பள்ளத்தாக்கு தலம் 11 அழிக்கப்பட்டு விட்டது. வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் மேலும் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு சுற்றுப்பயணம் மற்றும் கலாச்சார அமைச்சு இதில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (The book by V. Nadarajan – BUJANG VALLEY The Wonder that was Ancient Kedah (2011). தமிழ் – சோழன் வென்ற கடாரம் பூஜாங் பள்ளத்தாக்கு)

இதர பல தரப்பினர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து, கெடா மாநில மந்திரி புசார் முக்கிரிஸ் மகாதிர் பூஜாங் பள்ளத்தாக்கை உலக மரபுரிமைத் தலமாக பிரகடனப்படுத்தக் கோரும் கெடா மாநில அரசின் முன்மொழிதல் யுனெஸ்கோவிடம் 2014 ஆண்டின் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். (The Kedah Government proposal to UNESCO that Sungai Batu and Bujang Valley in Merbok be declared a world heritage site would be sent by end 2014.)

மேலும், இந்த முன்மொழிதல் ஊக அடிப்படையில் இல்லாமல் தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் முக்ரீஸ் கூறினார்.

 

மலாய் நாகரீகம் இருந்திருக்கிறது

 

தொல்பொருள் தலங்கள் அழிக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்பதோடு சுங்கை பத்து மற்றும் பூஜாங் பள்ளத்தாக்கு Bujang valley1பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்று சுற்றுப்பயணம் மற்றும் கலாச்சார அமைச்சுக்கு முன்மொழியப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் கெடாவுக்கும் மலேசியாவுக்கும் மட்டுமல்லாமல் உலகிற்கே மிக முக்கியமானதாகும் என்றாரவர், (This initiative is very important not only for Kedah and Malaysia but also for the world.)

சுங்கை பத்து மற்றும் பூஜாங் பள்ளத்தாக்கில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தவை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று கூறிய முக்ரீஸ், அவை அங்கோர் வாட் மற்றும் புறபுதூர் ஆகியவற்றுக்கு முற்பட்டது என்பதை நிரூபிக்கின்றன என்றார்.

“அவை 5 ஆம் நூற்றாண்டு கிமு காலத்தை சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. இது ஒரு மலாய் நாகரீகம் இதர சமயம் எதுவும் வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது”, என்றும் முக்ரீஸ் கூறினார். (“They are believed to date back to the 5th Century B.C. This proves that a Malay civilization existed long before the arrival of any religion.”)

முக்ரீஸ் தெரிவித்திருக்கும் மேற்கூறப்பட்ட கருத்து அவர் வேறொரு நோக்கத்துடன் பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்தை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெறும் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறலாம்.

Bujang valley9பூஜாங் பள்ளத்தாக்கு தலம் 11 உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக முக்ரீஸ் மேற்கூறப்பட்ட ஆய்வு அறிக்கையை 2014 ஆண்டின் இறுதிக்குள் யுனெஸ்கோவிடம் தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இப்போது ஜனவரி 2015 இல் இருக்கிறோம். அந்த ஆய்வு அறிக்கை தயாராகி விட்டதா? மேலும், உடைக்கப்பட்ட தலம் 11  மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?

முக்ரீஸ் அறிவித்திருந்தவாறு மாநில அரசின் பூஜாங் பள்ளத்தாக்கு பற்றிய ஆய்வறிக்கை தயாரிக்கப்படுவது அல்லது தயாரிக்கப்பட்டு விட்டது பற்றிய தகவல் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரத்தில் எந்தத் தகவலும் இல்லாத சூழ்நிலை சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. ஏனென்றால், பூஜாங் பள்ளத்தாக்கு குறித்த இது போன்ற அறிக்கைகள் இதர அமைச்சர்களால் முன்பு வெளியிடப்பட்டுள்ளன.

ஆகவே, மேற்கூறப்பட்ட இரு கேள்விகளுக்கும் பதிலைத் தேடி  பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வுக் குழு தலைவர் வி. நடராஜனுடன்  ஜனவரி 22 இல் தொடர்பு கொண்ட போது உடைக்கப்பட்ட சண்டி எண் 11 வாக்குறுதி அளித்தபடி இன்னும் கட்டப்படவில்லை என்றும், முக்ரீஸ் அறித்திருந்தவாறு பூஜாங் பள்ளத்தாக்கு பற்றி யுனெஸ்கோவுக்கு அனுப்புவதற்கான ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டதற்கான தகவல் ஏதும் இல்லை என்றார்.

 

பூஜாங் பள்ளத்தாக்கு பற்றிய மலேசிய-யுனெஸ்கோ தொடர்பு முக்ரீஸ் காலத்திற்கு முற்பட்டது

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இந்தியர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் சமயங்கள் வேறூன்றி அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இன்றைய மக்களையும் பிரமிக்க வைக்கின்றன. கம்போடியாவின் அங்கோர் வாட் மற்றும் இந்தோனேசியாவின் புறபுதூர் போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.

Bujang valley4இவற்றுக்கெல்லாம் முற்பட்டது மலேசியா, கெடா மாநிலத்தில் தோன்றிய பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகம் என்பது இப்போது அறியப்பட்டுள்ளது. இது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ்விடத்தில் 1936 -1937 களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் அங்கு காணப்பட்ட கட்டமைப்புகள் வலுவான இந்து-புத்த சமய நாகரீகத்தின் தாக்கத்தை உறுதிப்படுத்தின.

இவற்றை உருவாக்கியவர்கள் இந்திய வணிகர்கள் என்று ஆய்வாளர்கள் கணித்தனர். அக்காலத்தில், அரேபியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல் வழி வாணிபத்திற்கு பூஜாங் பள்ளத்தாக்குதான் மையமாக இருந்திருக்கிறது. மலாக்காவும் சிங்கப்பூரும் பிற்காலத்தில் தோன்றியவை.

அண்மையக்காலத்தில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (யுஎஸ்எம்) பூஜாங் பள்ளத்தாக்கில் மேற்கொண்ட ஆய்வில் இங்கு இரும்புத் தொழில் முன்னேற்றமான நிலையில் இருந்ததும், மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு கண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல. பூஜாங் பள்ளத்தாக்கின் பரப்பளவு முன்பு கணிக்கப்பட்டிருந்தது போல வெறும் 400 சதுர கிலோ மீட்டரல்ல. பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகத்தின் சுற்றளவு சுமார் 1,000 சதுர கிலோ மீட்டர் – பினாங்கு தீவின் அளவைப் போல் மூன்று மடங்கு பெரியது.

2010 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற பூஜாங் பள்ளத்தாக்கு  மற்றும் தென்கிழக்கு ஆசிய நாகரீகங்கள் மீதான அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்ட ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஜேம்ஸ் ஒபன்ஹெமெர், யுஎஸ்எம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது மலேசியாவுக்கு மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவுக்கே முக்கியதுமானது என்று கூறினார்.

Bujang valley6“இக்கண்டுபிடிப்பின் அடிப்படையில், நாம் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும், ஏனென்றால் கடந்த 2,000 ஆண்டுகளாக கூறப்பட்ட வரலாற்றில் இந்தோனேசியா அதன் ஸ்ரீவிஜயா மற்றும் மஜாபாகிட் நாகரீகங்களுடன் முதன்மையாக இருந்தது. வியட்நாமும் தாய்லாந்தும் அதில் அடங்கும்.

“ஆனால், இப்போது வரலாறு மாறுகின்றது”, என்று பேராசிரியர் ஸ்டீபன் கூறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த மூன்று-நாள் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, சீனா, மியன்மார் மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 பேராளர்கள் பங்கேற்றனர்.

பூஜாங் பள்ளத்தாக்கில் யுஎஸ்எம் மேற்கொண்ட ஆய்வின் வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை “தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று இந்த மாநாட்டின் போது கருத்துரைத்த முன்னாள் தகவல், தொடர்பு மற்றும் பண்பாடு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறினார்.

மேலும், அவரது அமைச்சு கெடாவிலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் ஆய்வு சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதை 10 ஆவது மலேசிய திட்டத்தில் மிகப் பெரிய செயல்திட்டமாக்கும் என்றும் தெரிவித்தார்.

பின்னர், 2011 ஆம் ஆண்டில், பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றுப்பூர்வ நிலங்களை வாங்குவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் என்றும் ரயீஸ் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்புகள் குறித்து அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவையின் உறுப்பினர்கள் ஆய்வுகள் Bujang valley10தொடர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதாகத் தெரிவித்த ரயிஸ் யாத்திம் “நாம் நமது சொந்த நாகரீகத்தின் தோற்றுவாயை வரலாறு மற்றும் தொல்பொருள் அடங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொள்வதின் வழி நுணுக்கமாகத் தெரிந்து கொள்வதின் முக்கியத்துவத்தை மறந்துவிடக் கூடாது”, என்று கூறினார்.

மேற்கூறப்பட்டவைகளிலிருந்து இரண்டு கூறுகள் கவனத்தை ஈர்க்கின்றன.

  1. பூஜாங் பள்ளத்தாக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டவைகளின் அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவின் 2000 ஆண்டுகால வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று பேராசியர் ஸ்டீபன் கூறியிருப்பது.
  2. நமது “சொந்த” நாகரீகத்தின் தோற்றுவாயை நுணுக்கமாக ஆராய்வது முக்கியமானதாகும் என்று அமைச்சர் ரயிஸ் யாத்திம் கூறியிருப்பது.

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டவை இந்தோனேசிய நாகரீகங்களை விஞ்சியிருப்பதால், கடந்த 2000 ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும் என்பது கல்விமான் ஸ்டீபனின் கருத்து.

நமது “சொந்த” நாகரீகத்தின் தோற்றுவாயை நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது அது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகும். அந்நாகரீகம், இப்போது முக்ரீஸ் கூறியிருப்பது போல், மலாய் நாகரீகம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ரயிஸ் யாத்திம் என்று கூறலாம்.

ஸ்டீபனின் கருத்து வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கம் கொண்டது என்று கூறலாம். ரயிஸ் யாத்திமின் கருத்து பூஜாங் பள்ளத்தாக்கின் மகத்துவத்திற்கு வேறொரு தொன்மையான நாகரீகம்  இருக்கிறது என்றதோர் தோற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது.

மேலும், முக்ரீஸ் கூறியிருப்பதைப் போலவே, பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டவை வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என்பதை வலியுறுத்தினார். (“…the research would involve foreign experts who would study the findings from the archaeological, anthropological and scientific aspects so that the results would be conclusive and not based on hypothesis.”)

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1968-1969 இல் மலேசிய அரசாங்கம் பூஜாங் பள்ளத்தாக்கில் ஒரு தேசிய வரலாற்று பூங்காவை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தது. அத்திட்டம் 1986 இல் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (“The Federal Government of Malaysia made a proposal in 1968-1969 to create a National Historical Park in the Bujang Valley. This plan was to become operational in 1986.”)  இத்தகவல் மலேசியாவுக்கு 1986 செப்டெம்பர் 15 லிருந்து அக்டோபர் 4 வரையில் வருகை மேற்கொண்ட யுனெஸ்கோ குழுவின் ஜோன் சேண்டே தயாரித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் (“Bujang Valley and Kuala Kedah Fort – Proposals for Masterplan”) கூறப்பட்டுள்ளது

 

Bujang valley3கால் நூற்றாண்டுக்கு முன்பு, 1987 இல், யுனெஸ்கோவின் ஜோன் சேண்டே பூஜாங் பள்ளத்தாக்கை மேம்படுத்தி அதனை ஒரு வரலாற்று பூங்காவாக உருவாக்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை, யுண்டிபியிடமிருந்து (UNDP) நிதி உதவி பெறுவது உட்பட, மிகத் துல்லியமாக தயாரித்து மலேசிய அரசாங்கத்திடம் தாக்கல் செய்திருந்தார். அதைப் பற்றிய பேச்சே இல்லை. அந்த 60 பக்கம்  கொண்ட பெருந்திட்டம் என்னவாயிற்று?

 

இத்திட்டம் வேறு யாருக்காவும் தயாரிக்கப்பட்டதல்ல.  மலேசியாவுக்காக 1987 இல் தயாரிக்கப்பட்டது. ஜோன் சேண்டே அவரது அறிக்கையில் இதை உறுதிப்படுத்துகிறார்: “Report prepared for the Government of Malaysia by the United Nations Educational, Scientific and Cultural Organization (Unesco)”.)

 

மேற்கூறப்பட்டுள்ளவை குறித்து ரயிஸ் யாத்திம் எதுவும் கூறவில்லை. ஆனால், இப்போது கெடா மாநில மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் சுங்கை பத்து மற்றும் மெர்பொக்கிலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கில் அறிவியல் பூர்வமான ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் பூஜாங் பள்ளத்தாக்கை உலகப் பாரம்பரியமாக தலமாக அறிவிக்கக் கோரும் முன்மொழிதல் 2014 ஆண்டு இறுதிக்குள் யுனெஸ்கோவுக்கு அனுப்பப்படும் என்று  தெரிவித்துள்ளார்!

 

இப்படித்தான், 2003 ஆம் ஆண்டில் ஜொகூரில் புதையுண்டு கிடக்கும் 1000 ஆண்டு தொன்மை வாய்ந்த கோத்தா கெலாங்கி குறித்து ஆய்வுkotta gelanggi மேற்கொள்வதற்கு 9 ஆவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கோரப்படும் என்று அருங்காட்சியகம் மற்றும் பழமைச் சின்னங்கள் இலாகா தலைமை இயக்குனர் அடி தாகா கூறியிருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆக, 1968-1969 லிருந்து 2013 ஆம் ஆண்டு வரையில் மலேசிய மற்றும் கெடா மாநில அரசாங்கங்கள் பூஜாங் பள்ளத்தாக்கை மேம்படுத்தி அதனை உலகப் பாரம்பரிய தலமாக்கப் போவதாக கூறி அதற்கு யுனெஸ்கோவின் பெயரைப் பயன்படுத்தி வந்தனெவேயன்றி ஆக்ககரமான நடவடிக்கைகள் எதனையும் கடந்த 46 ஆண்டுகளில் மேற்கொள்ளவில்லை.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றாலும் நாசகரமான செயல்களுக்கு பஞ்சமில்லை.

 

சண்டி உடைப்பு

 

Bujang valley8பூஜாங் பள்ளத்தாக்கில் சுங்கை பத்துவில் நில மேம்பாட்டாளர் ஒருவர் ஒரு சண்டியை உடைத்து விட்ட செய்தி இப்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலில், தமக்கு எதுவும் தெரியாது என்று சம்பந்தப்பட்ட கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார். மக்களிடமிருந்து எழுந்த ஆட்சேபத்தைத் தொடர்ந்து மேம்பாட்டு வேலையை உடனடியாக நிறுத்துமாறு கெடா மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிர் அறிவித்தார்.

இந்தத் தடை உத்தரவு தற்காலிகாமானது. சண்டி உடைக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட நில மேம்பாட்டு நிறுவனம் சௌஜானவும் இந்த உத்தரவை தற்போதைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனிடையே, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் உடைக்கப்பட்ட அந்த சண்டி தலத்தை பாதுகாக்க 2005 ஆண்டு தேசிய மரபுரிமை சட்டம் பயன்படுத்தப்படும் என்று கூறியதோடு “அந்த பழங்காலத்து ஆலயங்களை உள்ளடக்கிய அந்த புராதனப்பகுதி அழிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க தேசிய மரபுரிமைச் சட்டத்தை பயன்படுத்தும்படி அதன் ஆணையாளருக்கு தாம் (நஸ்ரி) உத்தரவிட்டுள்ளதாக” செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், “கெடா மாநிலத்தில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதன கோயில்களின் அடித்தளங்களைக் கொண்டுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு சுற்றுவட்டாரப் பகுதியை பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாக அரசு பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாக இடம் பெறுவதற்கு (கெஜட்) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று கெடா மந்திரி புசார் முக்ரீஸ் இப்போது கூறுகிறார்.

பினாங்கு தீவைவிட மூன்று மடங்கு பெரியதான, வரலாற்று பெருமை மிக்க, ஓர் இடம் கெடா மாநிலத்தில் 2000 ஆண்டுகாலமாக இருந்தது இவர்களுக்குத் தெரியாதா?  இப்போது போட்டி போட்டுக்கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதன் நோக்கம் என்ன?

பூஜாங் பள்ளத்தாக்கிலுள்ள பல்வேறு புராதன தளங்களும் சின்னங்களும் சிறுகச் சிறுக காணாமல் போவதும் அழிக்கப்படுவதும் ஒன்றும் புதிதல்ல. பூஜாங் பகுதியில் இன்னும் சில இடங்களுக்குச் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.  1974 ஆம் ஆண்டிலும் இக்குறிப்பிட்ட சண்டி தலம் உடைக்கப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஏன் பூஜாங் பள்ளத்தாக்கை இதுவரையில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக கெஜட்டில் பதிவு செய்யப்படவில்லை? ஏன் 2005 ஆம் ஆண்டு தேசிய மரபுரிமைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை?

மந்திரி நஸ்ரியும் மந்திரி புசார் முக்ரீஸ்சும் இவ்விவகாரத்தில் 2005 ஆண்டு தேசிய மரபுரிமை சட்டம் பாயும் என்றும், கெஜெட்டில் பதிவு செய்யப்படும் என்றும் கூறிக்கொண்டிருந்த வேளையில் பூஜாங் பள்ளத்தாக்கின் அகழ்வாராய்ச்சி தொல்பொருள்காட்சியத்தின் அதிகாரி ஒருவர் “வரலாற்றுப்பூர்வமான அப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாகும். இதனை கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மியூசியம் பாதுகாத்து வருவதாக” கூறிய செய்தி வெளியாகியுள்ளது.

மியூசியம் அதிகாரி கூறியிருப்பது உண்மை என்றால், அதிலிருந்து இரு கேள்விகள் எழுகின்றன. 1. “வரலாற்றுப்பூர்வமான அப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடம்” என்றால், சௌஜானா நில மேம்பாட்டு நிறுவனம் எப்படி அந்த இடத்தில் அதன் மேம்பாட்டு வேலையைத் தொடங்கியது? இவர்களுக்குத் தெரியாமல் அந்நிறுவனம் அந்த நிலத்தை திருடிவிட்டதா?

nazriஅடுத்த கேள்வி, “அந்த பழங்காலத்து ஆலயங்களை உள்ளடக்கிய அந்த புராதனப்பகுதி அழிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க தேசிய மரபுரிமைச் சட்டத்தை பயன்படுத்தும்படி அதன் ஆணையாளருக்கு தாம் (நஸ்ரி) உத்தரவிட்டுள்ளதாக” டிசம்பர் 3, 2013 செய்தி கூறுகிறது. அதாவது, சண்டி தலம் உடைக்கப்பட்ட செய்தி வெளியான பிறகு நஸ்ரி இந்த உத்தரவை இட்டார் (அப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால்?) என்பது அதன் பொருளாகும். ஆனால், மியூசியம் அதிகாரி கூறியிருப்பத்தைக் கவனித்தால் இந்த உத்தரவு 2005 ஆம் ஆண்டிலேயே கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. “வரலாற்றுப்பூர்வமான    அப்பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாகும். இதனை கடந்த 2005 ஆண்டு முதல் மியூசியம் பாதுகாத்து வருவதாக” அந்த மியூசியம் அதிகாரி கூறியிருப்பது உண்மை என்றால், நஸ்ரி கூறியிருப்பதை என்னவென்பது?

மியூசியம் அதிகாரியின் கூற்றுப்படி அந்த பாதுகாக்கப்பட வரலாற்றுப்பூர்வமான அப்பகுதியினுள் சௌஜானா எப்படி நுழைந்தது?

சௌஜாவின் செயல்திட்ட அதிகாரி சா குவான் கீட் அந்த நிலத்தை இன்னொரு நில மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார். அந்த நிலத்தில் தடைகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பது குறித்து கெடா நில அலுவலகத்தில் முதலில் இவ்வாண்டு ஜனவரி 14 இல் ஆய்வு செய்த பின்னர் பெப்ரவரியில் நிலத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் ஜூலை 30 இல் மீண்டும் நில அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் அந்த நிலத்தில் எவ்வித தடையையும் காணவில்லை என்று டிசம்பர் 2 இல் தெரிவித்தார்.

தங்களுக்கு முந்திய மேம்பாட்டு நிறுவனம் அந்த நிலத்தில் மேற்கொள்ளவிருந்த பலதரப்பட்ட மேம்பாட்டு செயல்திட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட கட்டட வரைவுக்கு சுங்கை பட்டாணி நகராட்சி மன்றமும் கெடா மாநில ஆட்சிக்குழுவும் 1994-1995 ஆண்டுக்களுக்கிடையில் ஒப்புதல் அளித்துள்ளன என்று சௌஜானா அதிகாரி சா விளக்கியிருக்கின்றார். சாவின் இக்கூற்று இன்னும் மறுக்கப்படவில்லை.

சா கூறியிருப்பது உண்மையானால், நஸ்ரியும் முக்ரீஸ்சும் இவ்விவகாரம் பற்றி கூறியிருக்கும் அனைத்தும் நாடகமே! நிலத்தை 1994-1995 இல் விற்றுவிட்டு 2005 ஆண்டு பாதுகாப்பு சட்டம் பற்றி 2013 இல் பேசுகிறார்கள்!

அவர்கள் பேசுவார்கள். கடந்த 46 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னும் 400 ஆண்டுகளுக்குக் கூட பேசிக் கொண்டே இருப்பார்கள். பூஜாங் பள்ளத்தாக்கு என்ற ஒன்று இருந்ததை மறக்கடிக்கச் செய்வதற்கு இது உதவும். இப்போதே “உண்ணா விரதம்” நமது மலேசிய கலாச்சாரம் இல்லை. அந்த தீய பழக்கம் எங்கு தோன்றியதோ அங்கேயே இருக்கட்டும் என்று கூறும் இன்றைய மலேசிய மகன்களின் எதிர்கால வாரிசுகள் நாங்கள் “பூஜாங்” இல்லை. அது மலேசிய கலாச்சாரம் இல்லை. நினைத்தால் குறைந்தபட்சம் நான்கு மனைவிகளை வைத்திருக்க முடியும். நமக்கு அண்டிகள் (aunty) இருக்கையில் சண்டிகள் ஏன் என்று கேள்வி எழுப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அக்கட்டத்தை அடையும் வரையில் நஸ்ரி மற்றும் முக்ரீஸ் போன்றவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மலாயா பல்கலைக்கழகத்தின் ஆசிய கலை கண்காட்சியகத்தில் தமிழர் கலை பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தமிழ் இனத்தின் வரலாறுகளையும் பெருமைகளையும் மீட்டெடுப்போம் என்று கூறப்பட்டதாக நாளிதழ் செய்தி கூறுகிறது. அக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த “பழங்கால தமிழர் பொருட்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த படம் ஒன்றில் தற்கால தையல் இயந்திரம் காணப்படுகிறது. அந்த தையல் இயந்திரம் “உஷா” தையல் இயந்திரம் போல் இருக்கிறது! இது போன்றவைதான் தமிழர்கள் வரலாற்று பொருட்கள் என்றால், அவற்றை பெறுவதற்கான ஏற்பாட்டை செய்ய நஸ்ரியும் முக்ரீஸும் தாராளமாக முன்வருவார்கள் என்று கூறலாம்.

கடும் சித்தம் தேவை

பூஜாங் பள்ளத்தாக்கு நாகரீகம் தென்கிழக்கு ஆசிய வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அளவிற்கு முக்கியமானது என்று ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் போன்றவர்கள் கூறியிருப்பதற்கு முக்கியத்துவம் அளித்து அந்தத் தொன்மை வாய்ந்த நாகரீகத்தை நிலைநிறுத்துவதற்கு உலகளவில் கடும் சித்தம் கொண்ட அறிஞர் பெருமக்களைத் திரட்டி இன்னும் காலத்தை வீணடிக்காமல் ஆவன செய்ய வேண்டும்.