தனுசின் அனேகன் படம் நாளை மறுநாள் (13–ந்தேதி) ரிலீசாகிறது. இந்த படம் திரையிடப்படும் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக சலவை தொழிலாளர்கள் அறிவித்து உள்ளனர்.
தனுஷ் தமிழில் கடைசியாக நடித்த வேலை இல்லா பட்டதாரி படம் கடந்த வருடம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்தியில் நடித்த ஷமிதாப் படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து தமிழில் நடித்த ‘அனேகன்’ படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது.
இந்த படத்தில் நாயகியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார். கார்த்திக், ஐஸ்வர்யா தேவன், ஜெகன், ஆசிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி ஆகியோரும் நடித்து உள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அயன், கோ, மாற்றான் உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார்.
அனேகன் படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்று அளித்துள்ளனர். இதையடுத்து இந்த படத்துக்கு அரசின் கேளிக்கை வரிவிலக்கும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் ‘அனேகன்’ படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. படம் தற்போது ரிலீசாவதை தொடர்ந்து தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று சலவை தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
-http://123tamilcinema.com