சரத்குமார் 2 வேடங்களில் நடித்த ‘சண்டமாருதம்’ படம் 350 க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகம் மற்றும் மும்பையில் வெளியாகிறது. சரத்குமார் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், ‘சண்டமாருதம்.’ இதில் ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூன்று பேரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.
சரத்குமார் பேட்டி இந்தப் படம் குறித்து சரத்குமார் நேற்று கூறுகையில், “சண்டமாருதம் படம், வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 250 தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. சென்னை நகர வினியோக உரிமையை ‘கலைப்புலி’ எஸ்.தாணு வாங்கியிருக்கிறார்.
வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டில் திரையிடப்பட இருக்கும் 20-ந் தேதியே மும்பை, டெல்லி மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் படம் திரையிடப்படுகிறது. வெளி மாநிலங்களில் மட்டும் சுமார் 100 தியேட்டர்களில் படம் திரையிடப்பட உள்ளது. ஒரு வாரம் கழித்து ஆந்திராவில் படம் வெளியிடப்படும்,” என்றார்.
சண்டமாருதம் இயக்குநர் ஏ வெங்கடேஷ் கூறுகையில், “பணம்…பணம்…என்று அதைத் தேடி அலையும் வில்லனையும், அவனுக்கு எதிராக களம் இறக்கிவிடப்படும் ‘என்கவுன்டர்’ போலீஸ் அதிகாரியையும் பற்றிய கதை இது. ‘சண்டமாருதம்’ என்றால் புயலை மிஞ்சிய காற்று என்று அர்த்தம். புயல் போன்ற வில்லனையும், அவனைத் தாண்டிய போலீஸ் அதிகாரியையும் கதை சித்தரிக்கிறது.
25 வருடங்களுக்குப்பின், சரத்குமார் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். புயல் போன்ற வில்லனை தென்றல் போன்ற கதாநாயகன் எப்படி தாக்குகிறார்? என்பதே திரைக்கதை. கதையை சரத்குமார் எழுதியிருக்கிறார்.
எழுத்தாளர் ராஜேஷ்குமார் தமிழ் சினிமாவில் முதன்முதலாக, இந்த படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார், எழுத்தாளர் ராஜேஷ்குமார். கூடுதல் திரைக்கதை அமைத்து நான் இயக்கியுள்ளேன்,” என்றார்.