சென்னை: நடிகர் விஜய் நடித்து பெரும் இழுபறிக்குப் பிறகு வெளியான “தலைவா” படத்துக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நடிகர் விஜய் மற்றும் தலைவா படத்தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமலாபால் நடித்த “தலைவா” படம் வெளியானது. படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து படம் திட்டமிட்டப்படி தமிழகத்தில் வெளியாகவில்லை. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.
ஓவர் இந்தி + ஆங்கிலம்..
நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெளியானது. தலைவா படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளிக்கப்பட்டதையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. அப்போது, படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர் குழு உறுப்பினர்கள். கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், “யு” சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட அரசு, தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி தலைவா திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என தற்போது உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தலைவா படத்தில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்தி வார்த்தைகளும் நிறைய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.