ஆண்டுக்கு 250 படங்கள் ரிலீஸ் பட வெளியீட்டில் கட்டுப்பாடு சாத்தியமா?

cncnசென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமா, வெளியீட்டில் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறது. டிஜிட்டல் சினிமாவின் வருகைக்குப் பிறகு படத் தயாரிப்பும், வெளியீடும் நினைத்துப் பார்த்திராத அளவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 200 படங்களைத் தாண்டி வெளியானது. இந்த ஆண்டு அந்தச் சாதனையை தமிழ் சினிமா முறியடிக்கும் என்றே தெரிகிறது. இந்த ஆண்டின் ஜனவரி தொடங்கி மார்ச் 30&ம் தேதி வரையிலான கணக்கில் இதுவரை 70 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. வெளியான படங்களில் ஆறு அல்லது ஏழு படங்கள் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்திருக்கிறது. அல்லது நஷ்டம் அடையாமல் காப்பாற்றி இருக்கிறது. சில படங்களுக்கு வரவேற்பு இருந்தும் வசூலைக் கொடுக்கவில்லை. பத்து சதவிகித வெற்றி 90 சதவிகித தோல்வி என்கிற நிலையே இந்த ஆண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெளியீட்டில் ஓழுங்குமுறை கொண்டு வரப்பட்டால் நஷ்டமடையும் படங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் கடந்த பல ஆண் டுகளாகவே பட வெளியீட்டில் ஒழுங்குமுறை கொண்டுவரும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும் போட்டியிடும் எல்லா அணியினரும் தரும் முதல் வாக்குறுதியே பட வெளியீட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவோம் என்பதுதான். ராம.நாராயணன் தலைவராக இருந்த காலத்தில் இருந்தே ரிலீசை முறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிறகு தலைவர்களும், நிர்வாகிகளும்தான் மாறிமாறி வந்திருக்கிறார்களே தவிர பட வெளியீட்டில் எந்த மாறுபாடும் நடக்கவில்லை. வாரத்துக்கு 4 நேரடி படங்கள், 2 டப்பிங் படங்கள் வெளிவரலாம். பண்டிகை காலங்களில் மட்டும் பெரிய ஹீரோக்கள் படம் வெளிவர வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்டு வரும் வெளியீட்டு ஓழுங்கு முறை. ஆனால் தற்போது படங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதால் இது சாத்தியப்படாது என்று கூறப்படுகிறது. ஜனவரி 1 (ஆங்கில புத்தாண்டு) ஜனவரி 14 (பொங்கல்), ஜனவரி 26 (குடியரசு தினம்),  ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் மட்டுமே பெரிய நட்சத்திரங்கள் நடித்த, பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரவேண்டும். மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்கள் வெளிவரவேண்டும் என்கிற புதிய ஒழுங்குமுறை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் கதிரேசன் கூறும்போது, ‘அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாராவதும், தியேட்டர் எண்ணிக்கை குறைந்திருப்பதுமான சிக்கலான சூழ்நிலையில் சினிமா இருக்கிறது. நூற்றுக்கு 3 சதவிகித தயாரிப்பாளர்தான் லாபம் பெறுகிறார். இலவசமாக படம் எடுத்து இலவசமாக வெளியிடுகிற மாதிரியான நிலைதான் இருக்கிறது. இந்த நிலையில் வெளியீட்டில் கட்டுப்பாடு கொண்டு வருவது அவசியம். ஆண்டில் 10 விசேஷ நாட்களில் பெரிய படங்களின் ரிலீஸ், மற்ற வாரங்களில் சிறு படங்கள் ரிலீஸ் என்பதுதான் முக்கிய அம்சம். இதுகுறித்து தியேட்டர் அதிபர்கள் சங்கக் கூட்டமைப்பு, வினியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல தீர்வு ஏற்படும்’ என்கிறார்.

ஆனால் திரைப்பட வெளியீட்டில் கட்டுப்பாடு கொண்டு வருவது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை, சாத்தியக்கூறுகள் பற்றி நிறைய ஆலோசிக்க வேண்டும் என்கிறார் தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன். அவர் மேலும் கூறும்போது, ‘கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறை சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயாமல் திடீரென கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முடியாது. பிலிம் சேம்பரில் நான் பொறுப்பில் இருந்தபோது இப்படி ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தோம். அப்போது, ஏவி. மெய்யப்ப செட்டியார் இந்த கட்டுப்பாட்டை மீறுகிறவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? என்ற கேட்டார். கொடுக்க முடியாது என்றோம். ‘அப்படியென்றால் இரண்டு மாதம்கூட இதை நடைமுறைப்படுத்த முடியாது’ என்றார். அதுதான் நடந்தது. அந்த நிலைதான் இன்றைக்கும். இன்றைக்கு சினிமா தயாரிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது.

அளவுக்கு அதிகமான படங்களை வெளியிட்டுவிட்டு தியேட்டர் தர மறுக்கிறார்கள், ஒரு காட்சி இரண்டு காட்சி திரையிடுகிறார்கள் என்று தியேட்டர்காரர்களை குற்றம் சொல்கிறார்கள். பண்டிகை காலத்தில் மட்டும் பெரிய ஹீரோக்கள் படம் என்பது பற்றி இன்னும் நிறைய யோசிக்க வேண்டும். பல கோடி போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர், படம் முடிந்த பிறகு அடுத்த பண்டிகைக் காலம் வரை வட்டி கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார். உடனே வெளியிடத்தான் நினைப்பார்.
பெரிய ஹீரோ படத்தின் ரிலீசுக்கு முதல் இரண்டு வாரம், எந்த படமும் ரிலீசாகாது. அப்போது தியேட்டர்காரர்கள் டப்பிங் படத்தையும், இந்தி படத்தையும் திரையிட்டு சமாளித்துக் கொண்டிருக்கிறோம். ஆண்டு முழுவதும் தியேட்டர் இயங்க சிறு பட்ஜெட் படங்களே காரணம். எனவே இந்தச் சிக்கலை சமாளிக்க மாற்று வழிகளை தியேட்டர் அதிபர்களுடன் சேர்ந்து திட்டமிடவேண்டும்’ என்றார்.படங்கள் வெளியீட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது எளிது. அதை நடைமுறைப்படுத்துவது கடினம். இதனை எப்படி சாத்தியப்படுத்த போகிறது தமிழ் சினிமா என்பதுதான் கேள்விக்குறி.

– cinema.dinakaran.com