காமன்வெல்த் மாநாட்டில் (CHOGM) சோரம் போகும் மலேசியா!

[கா. ஆறுமுகம்]

ஒரு கொலைகாரனுக்குத்  துணைபோவதை எப்படி வர்ணிப்பது! சுமார் 40,000 தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை செலுத்தும் மலேசியாவின் போக்கை செம்பருத்தி வன்மையாக கண்டிருக்கிறது.

2009-ம் ஆண்டு மே 17-ம் தேதி முடிவுற்ற இலங்கை இராணுவத் தாக்குதலில் சுமார் 40,000 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் தகர்க்கப்பட்டன. விடுதலைப் புலிகள் என்று கைதுசெய்யப்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், கற்பழிக்கப்பட்டனர், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள். சுமார் நான்கு இலட்சம் தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கில் அஞ்சி ஓடியவர்களில் சுமார் 200,000-க்கும் அதிகமானவர்கள் அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிகழ்வுகளை ஆய்வு செய்ய ஐக்கிய நாட்டு சபையின் பொதுச் செயலாளர் பான் கீ முன் ஒரு நடு நிலமை சிறப்பு குழுவை அமைத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான அதன் அறிக்கை இலங்கை இராணுவம் மனித நேயத்திற்கு எதிராக போர்க்குற்றம் புரிந்துள்ளதை உறுதிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நம்ப தகுந்த ஆதரங்களுடன் வெளியான நான்காவது அலைவரிசையின் காணொளி ஒன்று இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளதை உறுதிப்படித்தியது.

மனித நேயத்திற்கு எதிராக தனது நாட்டில் உள்ள மக்களை கொன்று குவிக்கும் ஓர் அரசாங்கம், தனது சுயநிர்ணய ஆட்சித் தன்மையை காரணம் காட்டி தப்பிக்க முடியாது, அதைப் பார்த்துக்கொண்டு உலக நாடுகள் சும்மா இருக்க இயலாது என்பது 2001-ம் ஆண்டின் 9/11 நிகழ்வுக்கு பிறகு வல்லரசுகள் உண்டாக்கிய பிரகடணமாகும்.

ஆனால், இந்த இலங்கைப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதையும், அனத்துலக நியதிகளுக்கு அப்பால் இராணுவம் கொடூரமாக நடந்துகொண்டதையும் மனித நேயத்திற்கு எதிரான போர்குற்றங்கள் என்று ஐக்கிய நாட்டு அறிக்கை சாடியும், உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக இதுவரை எவ்வித தண்டனை தரும் நடடிவக்கையையும் எடுக்க முன் வரவில்லை.

அதைவிட மோசமானது, இலங்கையின் அண்ட நாடுகளான இந்தியாவும் மலேசியாவும் இலங்கைக்கு ஆதரவு அளிப்பதாகும்.

2009-ம் ஆண்டு மே 17-ல் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு வெற்றிவிழா கொண்டாடியது. அதைத் தொடர்ந்து, உடனடியாக தனது (கொடுமையான) செயலை அங்கிகாரிக்க ஆதரிக்க கோரி ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கழகத்திடம் ஒரு மசோதாவை சமர்ப்பித்தது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 2009, மே 24-ம் தேதி பத்துமலை வளாகத்தில் சுமார் 10,000 மலேசியர்கள் ஒன்று கூடி கண்டனப் பேரணி நடத்தியதை மலேசிய அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மாறாக இலங்கை சமர்ப்பித்த மசோதா, 2009, மே 26-ம் தேதி விவாதத்திற்கு வந்தபோது மலேசியா அதை முழுமையாகவே ஆதரித்தது.

தொடர்ந்து மலேசியத் தமிழர் பேரவை மேற்கொண்ட அஞ்சல் அட்டை கண்டன நடவடிக்கையில் இறுதியில் 2009,டிசம்பர் 27-ம் தேதி பொது மக்களால் கையெழுத்து இடப்பட்ட 15,300 அஞ்சல் அட்டைகள் மலேசிய பிரதமர் நஜிப் துன் ராசக்கிடம்  சமர்ப்பிக்கப்பட்டன. இந்த அஞ்சல் அட்டை கண்டனத்தின் முக்கிய கோரிக்கை; காமன்வெல்த் நாடுகளிலிருந்து இலங்கையை வெளியாக்க மலேசியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.

நேற்று (28 அக்டோபர் 2011) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் காமன்வெல்த் நாட்டு தலைவர்களின் மாநாடு துவங்கியது. 54 நாடுகளின் கூட்டணியான இது சுமார் 200 கோடி மக்களை பிரதிநிதிப்பதாக கருதலாம். இதில் இலங்கையை அனுமதிக்ககூடாது, போர்குற்றவாளி ராஜபக்சேயை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் பயன் அளிக்காத நிலையில் மலேசியா இலங்கைக்கான தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது.

அப்பாவி தமிழர்கள் கொன்று குவித்து, இரத்தக்கறை படித்த ராஜபக்சேவுக்கு ஆதரவுகரம் நீட்டும் மலேசியாவின் நடவடிக்கை அநாகரிகமானது, அவசியமற்றது. பாலஸ்தீனர்களின் படுகொலைக்கும், பொஸ்னியா நாட்டின் போர்குற்றங்களுக்கும் மனித உரிமையை நிலைநாட்ட வெகுண்டெழும் மலேசியா, தமிழர்களை கொன்று குவித்த இலங்கையுன் உறவாடுவது கண்டனத்திற்குரியது.

மலேசியாவில் வாழும் 20 இலட்சம் இந்தியர்களின் எதிர்பார்ப்பும் மதம்-இன பேதமற்ற வகையில் மலேசியா நடந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும். ஆனால், மலேசியா இலங்கையுடன் கொண்டுள்ள தொடர்பு அந்த எதிர்பார்ப்பை தரைமட்டமாக்குகிறது. போர்குற்றம் புரிந்த இலங்கை இனவாத ஆதிக்கத்தை ஆதரிப்பதன்வழி, மலேசியா தனது இனவாதத்தை ஆழப்படுத்த முயல்வதாக உணரப்படுகிறது. இந்த தார்மீகமற்ற செயல் மலேசியத் தமிழர்களை மட்டும் இல்லாமல் அனத்து மலேசியர்களையுமே தலைகுணிய வைக்கும் தன்மை கொண்டதாகும்.

TAGS: