கிராமிய வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராஜ்கிரண், ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கமுன்வந்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எப்பவும் வேட்டியிலயே இருப்பதால் வேட்டி விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்தேன். மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் படப்பிடிப்புக்கு ஐந்தாறு லட்சம் கொடுப்போம். எனக்கு டபுள் சம்பளம் என்றார்கள். அப்போதும் மறுத்தேன். பிறகு சம்பளம் படிப்படியாக 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை சென்றது. மறுத்துக்கொண்டே வந்தேன். பொறுமை இழந்து மிரட்டுகிற தொனியில் ‘ஒன்றரைக் கோடி தருகிறோம். மறுக்காதீர்கள்’ என்றார்கள். விடாப்பிடியாக மறுத்தேன்.
அதற்கு அவர்கள் ‘நீங்கள் கடனில் இருக்கிறீர்கள் என்று தெரியும். இவ்வளவு பெரிய தொகை கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மறுக்கிறீர்கள். அதற்கான காரணத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்கள்.
‘வேட்டி என்பது ஏழை விவசாயிகள் உடுத்துகிற உடை. மிஞ்சிப்போனால் அதை அவனால் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்கள் எனக்கே இரண்டு கோடி சம்பளம் கொடுத்தீர்கள் என்றால், அந்தக் காசையும் அவனிடம் இருந்துதானே வசூலிப்பீர்கள். அதனால்தான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். பதில் சொல்லாமல் போய்விட்டார்கள்!” என்றார்.
ராஜ்கிரணின் இந்தச் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
-http://www.dinamani.com
இது தான் சமூக அக்கறை என்பது. வாழ்த்துகள் நண்பரே!
உண்மை தமிழன் நீயடா….