என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்.எஸ்.வி.: இளையராஜா உருக்கம்

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

இது குறித்து மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இளையராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில்

கூறியிருப்பதாவது:- நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீக குருவாக இருந்த சி.ஆர்.சுப்பராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ அப்படியே எம்.எஸ்.வி.யும் என் உயிரில், உடலில், ரத்தநாளங்களில் இதயத் துடிப்பிலும் மூச்சுக் காற்றிலும் கலந்திருக்கிறார்.

“தேவதாஸ்’ படத்தை சி.ஆர் சுப்பராமனால் முடித்துக் கொடுக்க முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து அந்த படத்தின் பாடல்களையும், பின்னணி இசைகோர்ப்பு பணியையும், முடித்துக் கொடுத்தார் எம்.எஸ்.வி. படத்தில் பிற பாடல்கள் நன்றாக இருந்தபோதும் எம்.எஸ்.வி. இசையமைத்த “உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்ற பாடல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்த பாடலின் வெற்றியால் தேவதாஸ் படம் நீண்டநாள் ஓடியது. அதேபோல் எம்.எஸ்.வியின் இசையினால் ஓடிய படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதவை. அந்த தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

பொதுவாக கலைஞர்களை வாழும் காலத்தில் அரசியலில் இருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை எம்.எஸ்.வி.யும் மத்திய அரசின் விருதுகளை தேடி போகவில்லை.

ஆனால், எம்.எஸ்.வி.க்கு அவர் வாழும் காலத்திலேயே முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசு மூலம் தனிப்பட்ட முறையில் எம்.எஸ்.வி. அவர்களுக்கு அரசின் சார்பாக மரியாதை செய்து அவர்களுக்கு கெüரவம் செய்தார். இது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ்.வி.யின் ஆன்மா சாந்தியடைய அவருக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை இளையராஜா செய்துள்ளார்.

-http://www.dinamani.com