ஒருவர் மீதுகொண்ட பற்றும், அன்பும் எக்காலமும் சற்றும் குறையாமல் இருப்பது என்பது என்னைப்பொருத்தவரை இசைஞானி இளையராஜா மீதுதான். ஒரு நாளும், அவரது எந்த ஒரு செய்கையாலும் அந்த எண்ணம் மாறியதே இல்லை.
திங்களன்று அவர் தனது மானசீக `அண்ணா` எம் எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்திய `என்னுள்ளில் எம்.எஸ்.வி` நிகழ்ச்சிக்கு அரங்கத்துக்கு சென்ற முதல் ஆள் நான் தான். இசைமழை துவங்குவதற்கு முன்னதாக அங்கே பேய்மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது. டிக்கெட் வைத்திருந்தவர்கள் போக, அரங்கத்தில் டிக்கட் வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வந்து தவித்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைப் பார்த்தபோது, நேரு விளையாட்டரங்கில் வைத்திருக்கவேண்டிய நிகழ்ச்சியை, ராஜா இவ்வளவு சிறிய காமராஜ் அரங்கில் வைத்துவிட்டாரே என்று கவலையாக இருந்தது. டிக்கட் கிடைக்காத சிலர் முகம் வாடிப்போனதைப்பார்த்தபோது, விட்டால் காதுகளை அறுத்து நம்மிடம் கொடுத்துவிடுவார்களோ எனும் அளவுக்கு பயமாகவும் இருந்தது.
நடக்கவிருப்பது வரலாறு குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டிய நெகிழ்ச்சி அல்லவா? சரியாக 7 மணிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குட்டியாக ஒரு முன்னுரை வழங்க, அடுத்த நிமிடமே ராஜ தரிசனம். பாடல்கள் இருக்கட்டும், இன்று ராஜா நிறைய பேசவேண்டும் என்று மனதார விரும்பினேன். என் விருப்பம் அவர் மனதை எட்டாவிட்டால் எப்படி? தனது இளமைக்காலங்களில் எம் எஸ் வி. தன்னை எங்ஙனம் ஆட்கொண்டார் என்பது குறித்து அவ்வளவு அற்புதமாக விவரித்தார். 14 வது வயதில் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி’யைக் கேட்டு மயங்கியதையும் அக்காலம் தொட்டே அவரை மானசீக குருவாக ஏற்று இசைப் பித்தனாக மாறியதையும் அவரது மாட்டு வண்டி எம் எஸ்.வி.யால் எப்படி பாட்டு வண்டியாக மாறியது என்பதையும் உணர்ச்சி மேலிடக் கூறினார்.
எளிமையான ஆர்கெஸ்ட்ரா. பிரபலமான பாடகர்களை அழைக்கவில்லை. சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு இல்லை என்னும் ராஜதர்பார் அமலில் இருந்தது. எம்.எஸ்.வி. அறிமுகமான ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ பாடலில் தொடங்கி ‘படகோட்டி` பாட்டுக்கு பாட்டெடுத்து’ வரை சுமார் 25 பாடல்கள் இசைக்கப்பட்டன. ‘மயக்கமா கலக்கமா’ உள்ளிட்ட சில பாடல்களை ராஜாவே தனது மந்திரக் குரலில் பாடினார்.
சுமார் மூன்றேகால் மணிநேரம் நடந்த நிகழ்ச்சியின் போது, கச்சேரி 10 மணியைத்தாண்டியபோதும் யாரும் தங்கள் கடிகாரத்தை, குறிப்பாக 9.50க்குக்கூட பார்க்கவில்லை! எம்ஜிஆரின் `பாட்டுக்கு பாட்டெடுத்து` பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறோம். அன்று இசைக்கப்பட்ட போது ரசிகர்கள் ஏதோ புதுசாய்க் கேட்பது கைதட்டி ரசித்துக் கேட்டார்கள். ‘இன்னைக்கும் யாரும் போடமுடியாத அபூர்வமான மெட்டு இது. சரணத்துல தொகையறா.. அதுக்கு எதிர் சரணம்னு அந்தக்காலத்துலயே எப்பிடி டியூன் போட்டிருக்கார் பாருங்க எங்க அண்ணா’ என்று ராஜா முன்னுரைத்த பிறகுதான் பலருக்கு அப்பாடலின் அருமையே தெரிந்தது.
அக்கூட்டத்தில் என்னை வியக்கவைத்த ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். அவர் பெயர் சிவாஜிராவாம். மற்றவர்களைப் போலவே அவருக்கும் அழைப்பு இல்லை. ஆனாலும் வந்திருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்பே வந்திருந்து, ஒவ்வொரு பாடல் இசைக்கப்பட்டபோதும் ராஜாவை அவ்வளவு பரவசமாய்ப் பருகிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில இருக்கைகள் தள்ளியே நான் அமர்ந்திருந்தேன். ரஜினியை அன்று நான் அவ்வளவு நேசித்தேன். அவ்வப்போது ராஜா மேடையிலிருந்தபடியே ‘சொல்லுங்க சாமி.. சொல்லுங்க’ என்றபடி அவருடன் உரையாடிக்கொண்டே இருந்தார். பின்னர் எம்.எஸ்.வி குடும்பத்தினருக்கு நிதி அளிக்க மேடைக்கு அழைக்கப்பட்டபோது அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டவராய் ராஜாவை இறுகத் தழுவி கண் கலங்கியபோது அவர் சூப்பர்ஸ்டாராய் அல்ல ஒரு குழந்தையைப்போல் காணப்பட்டார்.
இணையங்களில் சில சில்லரைப் பயல்கள் ராஜா காசுக்கு ஆசைப்பட்டு அந்த நிகழ்ச்சியை நடத்துவதாய் எழுதியிருந்ததை நீங்களும் படித்திருப்பீர்கள். எங்கள் ராஜாவைப்போல் சக கலைஞனை உச்சிமுகர்ந்து பாராட்டும் மனம் வாய்க்கப் பெற்றவர்கள் அரிதினும் அரிது. அதிலும் சினிமாக்காரர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அந்த வகையில் ராஜா நடத்திய அந்த நிகழ்ச்சி வரலாறு குறிப்பெடுத்துக்கொண்ட அரிய நெகிழ்ச்சி. அந்த இறுமாப்போடு சொல்கிறேன்… தமிழனுக்கு ஒரே ராஜா எங்கள் இளையராஜாதான்!
-தொடர்புக்கு: [email protected]