முன்பண தொகை 1 கோடி ரூபாயை வைத்து கலாம் அறக்கட்டளையைத் தொடங்கியது ஏன்?: ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் அடுத்ததாக இரு படங்களில் நடித்து, இயக்கவும் உள்ளார். இதற்காக கிடைத்த அட்வான்ஸ் தொகை ஒரு கோடி ரூபாயை வைத்து அறக்கட்டளை ஒன்றை அவர் தொடங்கியுள்ளார்.

இதுபற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது:

காஞ்சனா படம் எதிர்பாராத பெரிய வெற்றி பெற்றது. அதன் 2ம் பாகமும் பெரிய வெற்றி பெற்றது. இப்போது மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா என 2 படங்களில் இயக்கி நடிக்கிறேன். காஞ்சனா படத்தில் அரவாணி பற்றி நல்ல மெசேஜ் சொன்னதுபோல் மொட்ட சிவா கெட்ட சிவா படத்திலும் நல்ல மெசேஜ் சொல்ல உள்ளேன். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதற்கடுத்து நாகா படத்தைத் தொடங்குகிறேன். ராஜ நாகம் ஒன்றின் கதையாக இது இருக்கும் என்றார்.

ராகவேந்திரா புரொடக்சன், வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்கும், மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவில் லாரன்ஸுக்கு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டது.

பிறகு பேசிய லாரன்ஸ், ‘ரசிகர்கள் தரும் பணத்தை அவர்களுக்கு திருப்பி தருகிறேன். என் படங்களின் வெற்றிக் காரணம் ரசிகர்கள்தான். அவர்களுக்கு ஏதாவது தரவேண்டும். இப்போது ஆடி காரில் செல்கிறேன். இரண்டு வீடுகள் வாங்கியுள்ளேன். எல்லாவற்றுக்கும் காரணம் ரசிகர்களின் ஆதரவுதான். காஞ்சனா 2-வுக்கே ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நானும் மனிதன் தான். உடனே மனது வராது இல்லையா? அடுத்தப் படத்துக்குப் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன். காஞ்சனா 2 அதிகம் ஹிட் ஆனது. உடனே இந்தமுறை செய்துவிடவேண்டும் என நினைத்தேன். பணத்தைக் கையில் வாங்கிவிட்டால் பிறகு செலவழித்துவிடுவேன். அதனால் மேடையில் வாங்கும்போதே  இதை செய்துவிடுகிறேன். எனக்கு முன் பணமாக கிடைத்த ரூ. 1 கோடியை என்னை வாழவைக்கும் ரசிகர்களுக்கு வழங்குகிறேன்.

வீட்டில் அம்மாவிடம் சொன்னேன். உடனே ஏன் என்று கேட்டார்கள். அம்மாவிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னேன். பிறகு ஒப்புக்கொண்டார். மனைவியும் ஆச்சரியமானார். நண்பர்களிடமும் சொன்னேன். சிலர் ஏன் உனக்கு இதெல்லாம், அதிகப் பணம் கிடைக்கிறதா? உன் ஆசைகளெல்லாம் நிறைவேறிய பிறகு கொடுக்கலாமே என்று கேட்டார்கள். ஆசை எப்போது நிறைவேறும்? மேலும் மேலும் ஆசை வந்துகொண்டுதானே இருக்கிறது. ஆசை நிறைவேறாது இல்லையா!

100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சம் கொடுக்கிறேன். இளைஞர்களின் படிப்புக்கு அதைக் கொண்டு உதவ முடியும். .

இந்த ஒரு கோடி ரூபாயை வைத்து கலாமின் காலச்சுவட்டில் என்கிற அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளேன். தமிழக அரசின் கலாம் விருதை நான் வாங்கவேண்டும் என்றார்.

-http://www.dinamani.com