தமிழ்த்திரையுலகில், நடிகர்களின் சம்பளம்தான் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கக்காரணம் என்றும் அவர்களால்தான் எல்லாச்சிக்கலும் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. அண்மைக்காலமாக அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆர்யா நடித்த மீகாமன் படம் 2014 டிசம்பர் மாதம் வெளியானது. அப்போது படவெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அந்தச்சிக்கலைத் தீர்க்க படத்தின் நாயகன் ஆர்யா முன்வந்தார். அதன்விளைவாக அவருக்கு சுமார் பத்துக்கோடி வரை இழப்பு ஏற்பட்டதெனச் சொல்லப்பட்டது.
கடந்த ஜூலை 17 அன்று தான் நடித்த மாரி படம் வெளியாக வேண்டுமென்பதற்காக தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தது மற்றும் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான தொகையைக் கொடுத்தது உட்பட சுமார் பத்துக்கோடி இழப்பை தனுஷ் சந்தித்தார் என்று சொல்லப்பட்டது.
இப்போது வாலு படத்தை வெளியிடும் முயற்சியில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இறங்கி, சுமார் இருபதுகோடிவரை இழப்பைச் சந்தித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள் மிகச்சரியானதாக இல்லாவிட்டாலும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் பெரும்தோகையை இழந்து தங்களுடைய படத்தை வெளிக்கொண்டு வரப் பாடுபட்டிருக்கிறார்கள் என்பதில் மாற்றமில்லை.
தயாரிப்பாளருக்கு உதவுவதற்காகக் களத்தில் இறங்கும் நடிகர்கள் தொடர்ந்து இழப்பைச் சந்தித்தால் இனிவரும் காலங்களில் நடிகர்கள் இதுபோன்ற முயற்சியில் இறங்கமாட்டார்கள் என்றும் அதற்குப் பதிலாக விஷால் போன்று சொந்தத்தயாரிப்பில் மட்டுமே படம் நடிக்க முற்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
– dinakaran.com