திருகோணம் என்ற கிராமத்தில் மனைவி விசாலினி, மகள் வைதேகியுடன் வாழ்ந்து வருகிறார் கவுண்டமணி. இந்த ஊரின் எம்.ஏல்.ஏ.வாக இருக்கிறார் ஜெயபாலன். இவரது மகன் திருமுருகன். இவர்கள் இந்த ஊர் மக்களுக்கு நல்லது ஏதும் செய்யாமல் இருந்து வருகிறார்கள்.
மேலும் திருமுருகன் ஊரில் இருக்கும் நிலத் தரகர்களை கைக்குள் வைத்துக் கொண்டு விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய திட்டமிட்டு வருகிறார். மேலும் விவசாயிகளின் கஷ்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நிலத்தை குறைந்த விலைக்கு ஏமாற்றி வாங்குகிறார்.
இதை கவனிக்கும் கவுண்டமணி, மக்களுக்கு நிலங்களை பெற்றுத்தர வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் எம்.எல்.ஏ. ஜெயபாலன் இறக்கிறார். இதனால் அந்த ஊருக்கு இடைத்தேர்தல் வருகிறது. இதில் ஜெயபாலனின் மகன் திருமுருகன் எம்.எல்.ஏ.வாக போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பல கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் கவுண்டமணி மக்கள் மற்றும் மற்ற கட்சிக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று நிர்ணயித்து கட்சிக்காரர்களை கேட்கிறார். ஆனால் கட்சிகாரர்களோ பணம் கொடுத்து விட்டால் ஊர் மக்கள் மதிக்க மாட்டார்கள் என்று கருதி பணம் தர மறுக்கிறார்கள்.
தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இறுதியில் கவுண்டமணி நிலத்தை இழந்த கிராம மக்களுக்கு நிலத்தை வாங்கி தந்தாரா? தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பது மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுண்டமணி, முன்பு இருந்த அதே சுறுசுறுப்புடன் நடித்திருக்கிறார். அதே நையாண்டி, நக்கல், கிண்டல் என்று ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறார். பெயருக்கு ஏற்றாற்போல் படத்தில் அரசியல்வாதிகளுக்கு சரியான கவுண்டர் கொடுத்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுக்கும் அவர், அரசியல் கட்சிகளின் குறைகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார். தைரியமாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவுண்டமணிக்கு பெரிய பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.
படத்தில் கவுண்டமணிக்கு மனைவியாக வரும் விசாலினி, எம்.எல்.ஏ.வாக வரும் ஜெயபாலன், அவருடைய மகன் திருமுருகன், நான் கடவுள் ராஜேந்திரன், ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
விவசாயிகளின் வாழ்க்கை பிரச்சனையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் ஆரோக்கியதாஸ், அதில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். அரசியல்வாதிகள் யாரும் மக்கள் பிரச்சனையை கண்டுக்கொள்ளவில்லை. விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனருக்கு பெரிய கைதட்டல். துணிச்சலான வசனங்கள், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள், தேர்தல் முறைகேடுகளை தைரியமாக எடுத்துச் சொல்லியிருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவும், கே-வின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘49 ஓ’ துணிச்சல்.
-http://cinema.maalaimalar.com
இது போன்ற படங்கள் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகிறேன்!
அருமையான படம் என்ன குறை என்றால் இந்த படத்தில் செந்தில் இல்லை இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் இந்த படம்