கமல் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நன்கொடை கொடுத்ததாக சொல்லப்பட்ட செய்தி பொய்யானது என அறியப்படுகிறது!

kamal_hassan_001எய்டஸ் பாதித்த குழந்தைகளின் நிறுவனத்துக்காக கமல் ஹாஸன் ரூ 16 கோடி கொடுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டுக்கு வழங்கிவிட்டதாக, அந்த அமைப்பின் லெட்டர் பேடில் சான்று வழங்கி வெளியிடப்பட்டது.

இவை சமூக வலைத் தளங்களில் பரவின. பெற்றால்தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் அமைப்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவரது ட்ரஸ்ட்டிற்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா என்று கேள்விகளும் எழுந்தன.

இந்நிலையில் ,இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் வினிதா சித்தார்த்த் அளித்துள்ள விள்ளக்கம்: அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள்.

இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்,” என்றார்.

tamil.oneindia.com