சென்னை: குடும்ப வறுமை காரணமாக 12 வயதில் நாடக மேடை ஏறி நடிக்கத் துவங்கிய மனோரமா அங்கிருந்து சினிமா துறைக்கு வந்தார். 1937ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மன்னார்குடியில் கோபிசாந்தாவாக பிறந்தவர் மனோரமா. வறுமையின் காரணமாக அவரது குடும்பம் காரைக்குடி அருகே இருக்கும் பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது. ஆனந்தமாக ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் அவரின் தோளில் குடும்ப பொறுப்பு ஏற்றப்பட்டது.
12 வயதில் நாடக மேடை ஏறி நடிக்கத் துவங்கினார் மனோரமா. நாடக இயக்குனர் திருவேங்கடம் அவருக்கு மனோரமா என்ற பெயர் சூட்டினார். அந்த பெயரை அவருக்கு நிலையான பெயர் ஆகிவிட்டது.
வைரம் நாடக சபாவின் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோரமாவை நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். அதன் பிறகு அவர் எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான நாடங்களில் நடித்தார்.
1958ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான மாலையிட்ட மங்கை திரைப்படம் மூலம் மனோரமா வெள்ளித்திரையில் அறிமுகமானார். 1963ம் ஆண்டு வெளியான கொஞ்சும் குமரி படம் மூலம் ஹீரோயின் ஆனார்.
மனோரமா தனது நகைச்சுவையால் ரசிகர்களை தங்களின் கவலை எல்லாம் மறந்து சிரிக்க வைத்தார். நகைச்சுவை மட்டும் அல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பால் அசத்தியவர் ஆச்சி.
மனோரமா சிறந்த நடிகை மட்டும் அல்ல சிறந்த பாடகியும் ஆவார். 100 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஒரு நல்ல பாடகியை இழந்துவிட்டதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், பத்மினியும் ஹீரோ, ஹீரோயினாக நடித்தபோதிலும் அவர்களுக்கு இணையாக பேசப்பட்டது மனோராமாவின் ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம். ஜில் ஜில் ரமாமணியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
பாசமான அம்மா, அதி பாசமான பாட்டி கதாபாத்திரங்கள் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருபவர் மனோரமா ஆச்சி தான். எத்தனை குணச்சித்திர நடிகைகள் வந்தாலும் மனோரமாவின் இடத்தை யாரும் பிடிக்க முடியாது.
நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் மட்டும் அல்ல வில்லி கதாபாத்திரங்களிலும் ஒரு கலக்கு கலக்கியவர் ஆச்சி. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியவர் ஆச்சி.