சங்கத்தின் பெயரை மாற்றுங்கள் – நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்

barathirajaசங்கத்தின் பெயரை மாற்றுமாறு நடிகர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்சனைகளை நான்கு சுவற்றுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால் அரசியல் கட்சிகள் போல ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு தூற்றிக்கொண்டு இருக்க அவை நாள்தோறும் நாளேடுகளில், தொலைகாட்சிகளில் மற்றும் இதர ஊடகங்களில் அவர்களைப் பற்றிய அவதூறான செய்திகள் வருவது மிகவும் வருத்தத்திற்குறிய ஒன்றாகும்.

நடிகர் சங்கத்தில் முதலில் தீர்க்கபடவேண்டிய பிரச்சனை, படைப்பாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தை, தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் என பெயர் மாற்றச்சொல்லி தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். சரத்குமார் நடிகர் சங்க தலைவராக பொறுபேற்ற உடனே என் வேண்டுகோளுக்கு இணங்க நடிகர் சங்க பொதுகுழுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு மனதாக, தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது, மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இன்று வரை அந்த தீர்மானம் எந்த காரணத்தினாலோ நடைமுறைக்கு வரவில்லை. மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம் ஆனால் இன்று வரை நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் பிறமொழியை சேர்ந்தவர்களாக இருப்பதினால் தானோ என சந்தேகிக்க தோன்றுகிறது.

தமிழக திரைப்பட வரலாற்றை எடுத்து பாருங்கள், நம் மண்ணின் மைந்தர்களும் பிறமொழியை தாய் மொழியாக கொண்ட கலைஞர்களும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்கள். ஆனால் ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு, அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சங்கத்தை பிரிந்துக்கொண்டு, அவரவர் மாநிலத்திலேயே புதிய சங்கங்களை உருவாக்கிகொண்டவர்கள். அதற்கு பிறகுதான் நமது படைப்பாளிகள் எல்லாம் ஒன்று கூடி தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என பெயர் மாற்றப்பெற்று மகுடம் சூட்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பெயர் மாற்றம் செய்யமறுத்து வருகிறது.

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையிலும், தமிழர்கள் அல்லாதவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதிகாரமிக்க பதவிகளுக்கு தமிழர்கள் அல்லாதவர்களையே ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கபடுகிறது. ஆனால் பிற மாநிலத்தில் தமிழன் ஒரு வார்டு உறுப்பினராக பதவி வகிப்பதற்கு கூட தகுதியற்றவனாக கருதப்படுகிறான்.

நடிகர் சங்கம் மட்டுமில்லாமல், ஏனைய திரைப்பட சங்கங்களில் பிற மொழியினர் உறுப்பினராக இருப்பதில் தவறில்லை, ஆனால் தலைமைக்கும் நிர்வாக பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பில் எனக்கு உடன்பாடில்லை. இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, உங்களை வரவேற்கிறோம், உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாச்சார வேறுபாடின்றி இருக்கிறோம், நீங்கள் தொழில் செய்யலாம், சமுதாய கடமையாற்றலாம். எந்த துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தனிழன் தான் வரவேண்டும், மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்கு புரியாததல்ல.

ஆகையால் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கப் பொறுப்புக்கு போட்டியிடும் நடிகர்கள், தமிழ்நாடு திரப்பட நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழர்களின் தன்மானத்தையும், உரிமையும் காப்பாற்ற முன் வருமாறு வேண்டுகிறேன். தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் அங்கத்தினர்களாக இருக்கும் என் அன்பு தமிழ் சகோதரர்களே, தமிழ்நாடு நாடக மேடை நடிகர்களே, நமது நடிகர் சங்கத்தில் பிற மாநிலத்தை சேர்ந்த நாடக நடிகர்கள் யாரேனும் உறுப்பினர்களாக இருக்கிறார்களா? நம் மண்ணின் மைந்தர்களாகிய நாடக நடிகர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில், பின்பு ஏன் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என பெயர் உள்ளது? தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களும் வாக்களிக்கும் முன் ஒரு முறை சுயமாக சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in