400 ஏழைக் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்

raghava-lawrenceசென்னை: 400 ஏழைக் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று தனது பரந்த மனப்பான்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்க உணர்த்தியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

சமீபத்தில் லாரன்ஸ் தனது சம்பளப் பணத்தில் 1 கோடி ரூபாயை அப்துல்கலாம் பெயரால் 100 இளைஞர்களுக்கு வழங்கினார், தொடர்ந்து அண்ணா பல்கலை மாணவர்களின் இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்தார்.

இந்த பரபரப்பு மறைவதற்குள்ளாக தற்போது 400 ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ். சென்னையில் 200 குழந்தைகளையும் மற்ற மாவட்டங்களில் 200 குழந்தைகளையும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து இதற்காக தேர்வு செய்யவிருக்கிறார்.

இந்த 400 குழந்தைகளுக்கும் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை அவர்களுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் வழங்குவதாக லாரன்ஸ் அறிவித்து இருக்கிறார். சென்னையில் தேர்வு செய்யப்படும் குழந்தைகளை இங்குள்ள பிரபல பள்ளியொன்றில் படிக்க வைக்கவிருக்கிறார், இந்தப் பள்ளியின் சேர்க்கைக் கட்டணமே 1 லட்ச ரூபாயைத் தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியூர்களில் தேர்வு செய்யப்படும் 200 ஏழை மாணவ-மாணவிகளுக்கு அந்த பள்ளியின் கிளைகள் உள்ள வெளியூர்களில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது ‘இந்த 400 குழந்தைகளும் எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை படிக்கும் அனைத்து கட்டணத்தையும் தனது ‘லாரன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்’ அறக்கட்டளை செலுத்தும் என்று லாரன்ஸ் உறுதி அளித்திருக்கிறார்.

tamil.filmibeat.com