விஷால் அணி வெற்றிக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

nadikar sangkamநடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதிக்கொண்டன. இது பெரும் போர்க்களம் போலவே சித்தரிக்கப்பட்டது.

வழக்கமாக நடிகர் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதில் பெரும் போட்டி இருக்காது. ஆரவாரம் இல்லாமல் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்ற செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை நடந்த நடிகர் சங்க தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் களம் இறங்கியது. இதனால் ஏற்பட்ட மோதல் அரசியல் கட்சிகளையும், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலையும் நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது.

புதிதாக களம் இறங்கிய விஷால் அணியினர் சரத்குமார், ராதாரவி ஆகியோர் நடிகர் சங்க நிலத்தில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டிக் கொள்ள போட்ட ஒப்பந்தம் போட்டதை பெரும் தவறு என்று குற்றம் சாட்டினார்கள். பல முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்த சரத்குமார் இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நடிகர் சங்கத்துக்கு நிரந்தர வருமானம் வருவதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்றார்.

இதற்கு பதில் சொன்ன விஷால் நாங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என்றார். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் நடிகர் சங்க கட்டிடம் தனியார் கட்டுப்பாட்டுக்கு போய் விடும். நடிகர் சங்கம் என்ற அடையாளமே இருக்காது என்றார்.

அரசியல் கட்சிகளின் பிரசாரம் போல இரண்டு அணியினரும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தனர். நாடக நடிகர்களை சந்தித்தார்கள். சென்னையில் இருக்கும் நடிகர் நடிகைகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஓட்டு கேட்டார்கள்.

முதலில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் ஊர் ஊராக சென்று நாடக நடிகர்களை சந்தித்தனர். அடுத்து விஷால் அணியினர் தனி பஸ் பிடித்து ஊர் ஊராகப் போய் நாடக நடிகர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு அணியினரும் தங்கள் அணிதான் பலமானது என்று காட்டுவதற்காக திருமண மண்டபங்களில் கூட்டம் நடத்தினார்கள்.

இதில் பேசியவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டார்கள். சரத்குமார் அணியில் அவரது பேச்சு தங்கள் அணியை நியாயப்படுத்தவதாக இருந்தது. ஆனால் ராதாரவி, சிம்பு ஆகியோர் ஒருமையில் எதிர் அணியினர் பற்றி பேசியது நடுநிலையாக இருந்த நடிகர்களை முகம் சுளிக்க வைத்தது. பல்வேறு மாநிலம், மொழி சார்ந்த நடிகர் சங்கத்தில் சாதி பற்றிய பேச்சும் எழுந்தது. இது மூத்த நடிகர்களையும், நடுநிலையாளர்களையும் காயப்படுத்துவதாக இருந்தது.

சரத்குமாருக்கு மூத்த நடிகர்களிடையே பெரும் ஆதரவு இருந்தது. நாடக நடிகர்களில் பெரும்பாலானோரும் இந்த அணியைதான் ஆதரித்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் நிலைமை மாறியது.

விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் தீவிரமாக வேலை பார்த்தனர். நாடக நடிகர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தனர். நலிந்த நடிகர்களை கை தூக்கி விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர். இது நாடக நடிகர்களின் ஒரு பிரிவினருக்கும், நடுநிலையில் இருந்த மற்ற நடிகர் – நடிகைகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகு சரத்குமார் அணியினரும் பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அது ஏற்கனவே நடிகர் – நடிகைகள் எடுத்த முடிவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

‘மாற்ற வேண்டும்’ என்று விஷால் அணியினர் எழுப்பிய கோஷம் நடிகர் – நடிகைகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தியது. வெளியூர் நாடக நடிகர்களின் ஓட்டுகள் சரத்குமார் அணிக்கு சாதகமாக இருந்தன. என்றாலும் இளைஞர்கள் நிறைந்த விஷால் அணியின் முயற்சியும், நீண்ட நாட்கள் பதவியில் இருந்தவர்களை மாற்றலாம் என்ற எண்ணமும் சேர்த்து விஷால் அணிக்கு இந்த வெற்றியை பெற்றுத் கொடுத்திருக்கிறது.

-http://cinema.maalaimalar.com