துபாய்: எந்த மொழியையும் கற்று கொள்ளுங்கள் சுந்ததிரமாக படியுங்கள் அது தனி மனித உரிமை ஆனால் தாய் மொழியை கற்று கொண்ட பிறகு மற்ற மொழிகளை கற்றுகொள்ளுங்கள் என ஷார்ஜாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். ஷார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். துபாய் இந்திய துணை தூதரகத்தின் கல்வி மற்றும் ஊடகத்துறை அதிகாரி சுமதி வாசுதேவ் , அன்வர் பாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை பலீலா ஆசாத் நூல் குறித்த அறிமுக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வைரமுத்து ஏற்புரை வழங்கி பேசியதாவது, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஷார்ஜா மன்னருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 9ம் நூற்றாண்டுக்கும் இடையே 13ம்நூற்றாண்டுக்கும் இடையே முஸ்லிம் மன்னர்கள் ஹவுஸ் ஆப் விஸ்டம் என்ற ஒரு ஞான மாளிகையை ஏற்படுத்தியிருந்தார்கள். உலகில் உள்ள மொத்த அறிவு களஞ்சியங்களையும் அரபி மொழியில் கொண்டு வந்தார்கள் என்ற தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன்.
பல்வேறு நிலைகளால் பிரிந்து கிடக்கும் உலகம் அறிவு என்ற வானத்தின் கீழ் ஒன்று பட வேண்டும். உலகில் ஒரு சூரியன் தான், ஒரு நிலவுதான், மனிதனுக்கு அறிவு என்பது ஒன்றுதான் அறிவை சமநிலைபடுத்த வேண்டும். மேல் நாடுகளில் கூட செல்போன் இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் செல்போன் இல்லாதவர்களே இல்லை. நான் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன் அங்கு நாற்று நடுகிற ஒரு ஒரு பெண் கழுத்தில் செல்போன் தொங்கி கொண்டிருந்தது. ‘என்னமா கழுத்தில தாலி மாதிரி செல்போன தொங்க விட்டிருக்கிறாய்’. என்றேன் ஆமாங்க இப்பல்லாம் இதான் தாலி என்றார் ‘அப்படின்னா தாலி எங்கே’ என்று கேட்டேன் ‘அதனை விற்றுதான் இதனை வாங்கினேன்’ என்றார் தொழிநுட்பம் மனிதர்கள் எப்படி ஆட்டுவிக்கிறது என்பதற்காக இதனை சொல்கிறேன்
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வீட்டில் தமிழ் பேசுங்கள். பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுங்கள் தமிழ் பேசும் வரைதான் அவர்கள் உங்கள் கலாச்சாரத்தின் பிள்ளைகள். தமிழ் என்பது மொழி அல்ல ஒரு நாகரீகம், பண்பாடு,நீண்ட வரலாறு தமிழ் என்பதை பண்பாட்டின் அடையாளம் என்று கருதும் போதுதான் மண் பெருமை பெறும்.எந்த மொழியையும் கற்று கொள்ளுங்கள் சுந்ததிரமாக படியுங்கள் அது தனி மனித உரிமை பல மொழிகள் கற்றவர்கள் பல மனிதராகலாம்.தாய் மொழியை கற்று கொண்ட பிறகு மற்ற மொழிகளை கற்றுகொள்ளுங்கள். ஏனென்றால் மனைவி என்பவர் சிலருக்கு ஒன்றுக்கு மேல் இருக்கலாம் , வளர்த்தவர்கள் நான்கு பேர் இருக்க முடியும் ஆனால் அனைவருக்கும் ஒருதாய்தான் இருக்க முடியும். நம்மை பெற்றெடுக்க தாயால் மட்டுமே முடியும் எனவே தாய் ஒன்றுதான் எனவே தான் தாய்மொழி என்ற பெயர் வைத்தார்கள். தாய்மொழிக்கு முதலிடம் கொடுப்போம்
தமிழர்களே வெளிநாட்டில் பொருள் ஈட்டுங்கள் அந்த மண்ணை மதியுங்கள் பொருள் சேர்த்து தாயகத்திற்கு திரும்பி விடுங்கள் எம் தமிழருக்கு தொழில் தந்த மண் , உணவு தந்த மண் இந்த மண்ணை வணங்குகிறேன் ஆனால் என் மண்ணைதான் நேசிக்க முடியும். எனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சம்பாதித்து செல்வத்தோடு சிறப்போடும் உங்கள் தாய் மண்ணுக்கு திரும்பி விடுங்கள் இந்த மண்ணில் வேலை செய்தீர்கள் அங்கு தாய் தமிழ்நாட்டிற்கு வந்து பலருக்கு வேலை தாருங்கள்.தமிழகம் உங்களை வரவேற்க காத்திருக்கிறது.
வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி கொள்வோம் .என் புத்தகத்தைதான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை தமிழில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டி கிடக்கிறது.அனைத்தையும் கற்று அறிவை பெருக்கி கொள்வோம். தமிழோடு வாழுங்கள், தமிழை வாழ வைங்கள் இவ்வாறு பேசினார்.பின்னர் பார்வையாளர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை ஹமீது ரஹ்மான், அமுதரசன், முத்தமிழ் மன்றம் மோகன், நட்ராஜன், சிம்மபாரதி, அருண்,மீரான்,நியாஸ் ,ஜெசிலா, ஆசிப் மீரான் ,ரஃபி அஹமது, நாகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-http://www.dinakaran.com