கோவா: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜவுக்கு 2015ம் ஆண்டுக்கான இந்திய திரையுலக ஆளுமை விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாலிவுட் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர்.
கோவாவில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திரைப்பட விழா நேற்று கோவா தலைநகர் பனாஜியில் கோலாகலமாக தொடங்கியது. இதில் சர்வதேச திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 187 வெளிநாட்டு படங்களும், 47 இந்திய படங்களும் திரையிடப்பட உள்ளன.
இந்நிலையில் விழாவில் இசையானி இளையராஜவின் சாதனைகளை பாராட்டும் விதமாக அவருக்கு 2015ம் ஆண்டுக்கான இந்திய திரையுல ஆளுமை விருது வழங்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாலிவுட் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர்.
அப்போது அரங்கில் இருந்த ஒட்டுமொத்த திரைபிரபலங்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பேசிய இளையராஜா, ‘‘உலகம் முழுவதும் இன்று வன்முறை அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும். இசையால் வன்முறை எண்ணங்கள் எழுவதை தடுக்க முடியும்” என்றார்.
விழாவில் ரஷ்ய திரைப்பட தயாரிப்பாளர் நிகிதா மிக்கல்கோவ்வுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அனில்கபூர் 1989-ம் ஆண்டு ஹிட்டாக ஓடிய ‘மை நேம் இஸ் லக்கான்’ திரைப்பட பாடலுக்கு நடனமாடி அரங்கை அதிரவைத்தார்.
ரஜினிக்குப் பிறகு நூற்றாண்டு சிறப்பு விருது பெற்ற இளையராஜா!
கோவா: இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசின் சிறப்பு விருது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி கவுரவித்தார் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.
கோவாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் இந்திய திரை இசையுலகில் பெரும் சாதனைப் படைத்துள்ள இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த விழாவில் பேசிய இளையராஜா, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சிறந்த இசைக்காக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ள இளையராஜாவுக்கு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியுள்ளது. அவருக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும் என ரசிகர்களும் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளது நினைவிருக்கலாம்.