ஆந்திரா புயலுக்கு அள்ளிக் கொடுத்த நடிகர்கள் தமிழர்களுக்கு கிள்ளிக் கூட கொடுக்கலையே… ரஜினி உட்பட

nadikarkal

தமிழகத்தின் தலைநகர் தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் என நான்கு மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்க , நிவாரணம் என்ற பெயரில் நேரில் சென்று பார்த்து பல அரசியல் கட்சியினரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்து வருகின்றனர். இதில் கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு பல நடிகர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திரா புயலுக்கு நிதி உதவி கொடுத்தவர்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லையே என்று பலரும் ஆதங்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும் செய்ய முடியாது நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரட்சனையை மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு மட்டுமே என்று நடிகர் சங்கத்தினர் பேட்டியளிக்கவே, இதனை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் சங்கத்தில் மாற்றம் வேண்டும் என்று கோஷமிட்டு வெற்றி பெற்ற நாசர், விஷால் தலைமையிலான குழு, பதவியேற்ற சில நாட்களிலேயே, காவிரி பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது என்று அறிவித்தது. காவிரி நீர் பிரச்சனை, இலங்கைத் தமிழர் விவகாரங்களில் நடிகர் சங்கம் தலையிடாது. அதே நேரம் அதற்கு என்னுடைய தனிப்பட்ட ஆதரவு எப்போதும் உண்டு” என்று கூறிய விஷால், அரசியல் பிரச்சினையில் தலையிட அரசியல்வாதிகள் இருக்கிறார் என்று விளக்கம் அளித்தார். அதேபோலத்தான் இப்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற அறிவித்துள்ளனர். ஆனால் இது அரசியல் பிரச்சினையில்லையே, மக்கள் பிரச்சினைதானே. மக்களுக்காக அரசியல்வாதிகளும், அரசியல் அமைப்புகளும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. நடிகர்களும் செய்ய வேண்டியதுதானே.

ஆந்திரா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஹூட் ஹூட் புயல் தாக்கியபோது விஷால், சூர்யா, கார்த்தி ஆகிய தமிழ் நடிகர்கள் விழுந்தடித்துக்கொண்டு போய் நிவாரணம் அளித்தார்கள். காரணம் இல்லாமல் இல்லை. எல்லாம் தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்துதான். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் உணர்வுள்ள நடிகர்களும், தமிழக நடிகர்களும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்காதது ஏன் என்று டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பலரும் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

தங்களின் அபிமான நடிகர்கள் நடித்த படம் வெளியாகும் போது தனது கை காசினை செலவு செய்து கட் அவுட் வைக்கின்றனர். அவர்களுக்கு சவுக்கடி தருகிறது இந்த பதிவு.

மத்தியில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நதிநீர் இணைப்புக்காக தனது பங்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என்று அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அது வெறும் அறிவிப்பாகவே நிற்கிறது. இதே நடிகர்தான் ‘என் ஒரு துளி வியர்வைக்கு… ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா..’ என்று பாடி புல்லரிக்க வைத்தவர். இந்த வெள்ள பாதிப்புக்கு எந்த நிவாரண அறிவிப்பும் அவரிடம் இருந்து வரவில்லை.

ஆந்திராவில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அங்குள்ள நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி பத்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அம்மாநில முதல்வரிடம் அளித்தனர். ஆனால் இங்குள்ள நடிகர்களில் ஒரு சிலரைத் தவிர இதுவரை யாரும் வாய்திறக்கவில்லை. நடிகர் சங்கமோ எதுவும் செய்யமுடியாது என்கிற ரீதியில் அறிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதே நேரத்தில் நடிகர்களுக்கு ஆதரவாகவும், நடிகர் சங்கத்திற்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளார் ஒருவர். அவர் தனது பதிவில் , வெற்றி பெற்றால் தமிழ்நாட்டு பிரச்சினைக்குக் குரல் கொடுப்போம் என்று நடிகர் சங்கத்தினர் ஒருபோதும் சொன்னதில்லை என்று தெரிவித்துள்ளார்.

-http://tamil.oneindia.com