கோவனுக்கு ஒருநீதி, சிம்பு – அனிருத்துக்கு ஒரு நீதியா? புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவங்களை!!

simbu-anirudhஒரு சினிமாக்காரனால் பெண்களை இதற்கு மேல் இழிவுபடுத்திவிட முடியாது எனும் அளவுக்கு மோசமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு பாடலை எழுதி, அனிருத்தின் இசையில் தானே பாடியுள்ளார் சிம்பு. இழிவான ஒரு வார்த்தையைப் பிரயோகித்து, அதை மறைக்க முயற்சிப்பது போல முதலில் ஒரு ‘பீப்’ ஒலியைப் பயன்படுத்தி, மூன்று தடவைக்குப் பிறகு முழுமையாக அந்த கேவல வார்த்தையை உச்சரிக்கிறார் சிம்பு.

இந்தப் பாட்டுக்கு அந்த பீப் ஒலியையே தலைப்பாகவும் வைத்துள்ளார். ஆக இது ஒன்றும் தெரியாமல் நடந்ததல்ல. வேண்டுமென்றே நன்கு திட்டம் போட்டு செய்த வேலை. மழை வெள்ளத் துயரில் சிக்கி சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வரும் இந்த வேளையில் அந்த வக்கிரமான பாடலை லீக் செய்து எதிர்மறை விளம்பரம் தேடப் பார்த்துள்ளனர் சிம்புவும் அனிருத்தும்.

ஆனால் பின்விளைவுகள் இந்த அளவு மோசமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை போலும். தொடர்ச்சியான புகார்கள் காரணமாக அந்தப் பாடலை யு ட்யூப் நீக்கிவிட்டாலும், அதன் ஆடியோ வடிவம் வாட்ஸ் ஆப் வழியாக பலரது செல்போன்களிலும் வைரஸ் மாதிரி தொற்றிக் கொண்டுள்ளது. இப்போது மக்கள் முன் வைக்கும் மிக அழுத்தமான கேள்வி இதுதான்…

kovan_003டாஸ்மாக்கால் தமிழகம் படும் துயரத்தை சொல்லும் வகையில் ஊத்திக் கொடுத்த உத்தமி என்ற பாடல் பாடியதற்காக கோவனை நள்ளிரவில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தது தமிழக அரசு. அதுவும் இறையாண்மைக்கு எதிரான குற்றமாக வழக்குப் பதிவும் செய்தது. ஆனால் பெண்களை படு கேவலமாகச் சித்தரித்து, நேரடியாகவே கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி பாடலை ஒன்றை உருவாக்கியுள்ள சிம்புவையும் அனிருத்தையும் இன்னமும் கைது செய்யாமல் உள்ளனர். போலீசில் புகார் செய்த பிறகு வழக்குப் பதிவு செய்தாலும், இன்னமும் இவர்கள் கைதாகவில்லை. முன்ஜாமீனுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவனுக்கு ஒருநீதி, சிம்பு – அனிருத்துக்கு ஒரு நீதியா? புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவங்களை, என்று மக்கள் சமூக வலைத் தளங்களில் வற்புறுத்தி வருகின்றனர்! மேலும் அம்மா மக்களால் அழைக்கப்படும் ஒரு பெண் முதல்வராக உள்ள மாநிலத்தில் இப்படி ஒரு பாடலை எழுத, பதிவு செய்ய, வெளியிட அனுமதிக்கலாமா? இவர்களை இன்னும் விட்டுவைக்கலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர் பொதுமக்கள்.

tamil.filmibeat.com