ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. மாடு பிடி வீரனாக மட்டற்ற மகிழ்ச்சிங்க எனக்கு.. சூரி!

Sooriமத்திய அரசு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக நடிகர் சூரி தெரிவித்திருக்கிறார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்படுகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி ஒரு மாடுபிடிக்கும் வீரனாக இந்த அறிவிப்பு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி.மதுரையைச் சேர்ந்த சூரி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ஒரு மாடுபிடிக்கும் வீரராகவும் திகழ்ந்தவர். இவரது மதுரை வீட்டில் ஏராளமான மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று வெளியான ஜல்லிக்கட்டு அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று சூரி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சூரி கூறும்போது “தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த வருடமும் நடைபெறாமல் போய்விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. ஒரு மாடுபிடி வீரனாகவும், மாடுகளை வளர்த்தவனாகவும் ஜல்லிக்கட்டு மேல் நான் கொண்டிருந்த பாசம் அளவிட முடியாதது.

வெளிநாடுகளைப் போல ஒரு சிகப்பு துணியைக் கையில் வைத்துக்கொண்டு காளையை சுவற்றில் மோத விட்டு நாம் கொல்வதில்லை. கம்பீரமான திமில்களுடன் நிற்கும் காளைக்கு நேராக நாம் நின்று திமிரோடு அதனை அடக்க முயல்கிறோம். இது தான் தமிழர்களின் வம்சாவழி வீரம்.

எந்தக் கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக எதிர்க்கிறவன் தமிழன். அதற்கான அடையாளம்தான் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு. மொத்தத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் தனி, மாடுகள் தனி என என்றுமே பிரித்துப் பார்க்க முடியாது.

தமிழர்களின் அன்புக்கும், வீரத்துக்கும் அடையாளமான ஜல்லிக் கட்டு நிகழ்வு இந்தவருடம் நடக்க இருப்பது ஒவ்வொரு தமிழர்களுக்குமான வெற்றித் திருவிழா. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மிகக் கவனமாகச் செய்துகொண்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதபடி தமிழர்களின் வீரவிளையாட்டை நாம் அரங்கேற்றிக் காட்டுவோம். இவ்வாறு நடிகர் சூரி தெரிவித்திருக்கிறார்.